நேப்பிடாவ்: மியன்மாரின் அயேயார்வாடி வட்டாரத்தில் நிலவும் மோதல்கள், எரிபொருள் பற்றாக்குறை, விளைநிலம் சேதம் போன்றவற்றால் மக்களின் வாழ்வாதாரமும் உணவுப் பாதுகாப்பும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறைந்தது 30,000 கிராமவாசிகள் கடுமையான வெள்ளப்பெருக்கில் அவதிப்பட்டு வருகின்றனர்.
இத்தகைய நெருக்கடியின் மையப்பகுதியாக லெமியேத்னா நகரம் உள்ளது. இங்குள்ள நதியின் கரை ஜூலை 30ஆம் தேதி இரவு உடைந்ததால் வெள்ள நீர் கிராமங்களுக்குள்ளும் விவசாய நிலங்களுக்குள்ளும் புகுந்தது.
கரை உடைந்ததற்குப் பலத்த மழையும் மண் அரிப்புமே காரணம் என மியன்மார் அதிகாரிகள் கூறினர்.
ஆனால், எலிகளின் வளைகள், கரையான் புற்றுகளால் பலவீனமடைந்திருந்த பழைமையான அந்தக் கரை மிகவும் மோசமான நிலையில் இருந்ததாகச் சில கிராமவாசிகள் தெரிவித்தனர்.
மேலும், மியன்மார் ராணுவத்திற்கும் அரகான் ராணுவத்திற்கும் இடையே ஏற்பட்ட மோதல் இந்தப் பகுதிக்கும் பரவியதால் பராமரிப்புப் பணிகள் சிக்கலாகியுள்ளன.
“கிராமமே துயரத்தில் மூழ்கியிருக்கிறது. மீட்புக் குழுவினரும் நன்கொடையாளர்களும் வந்தததால் மகிழ்ச்சி அடைந்தோம்,” என்று ஒரு கிராமவாசி கூறினார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிக்குச் செல்லும் பாதை ஆபத்தானது என்று அரசுப் பாதுகாப்புப் படைகள் அறிவித்துள்ளன. இதனால், நாட்டின் பிற பகுதிகளிலிருந்து வரும் தனியார் மீட்புக் குழுவினர் அப்பகுதிக்குள் நுழைவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.


