கிள்ளான்: கிள்ளானில் திங்கட்கிழமை (ஜனவரி 20) பிற்பகல் வேதி ஆலை ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பில் 32 பேர் காயமுற்றதாக மலேசியக் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
காயமடைந்தவர்கள் 20 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்று கிள்ளான் உத்தாரா மாவட்டக் காவல்துறைத் தலைவர் எஸ். விஜய ராவ் கூறினார். வெடிப்பு நிகழ்ந்தபோது அவர்கள் அந்த இடத்திற்கு அருகில் இருந்தவர்கள் என்றார் அவர்.
உள்ளூர்வாசிகளான அவர்கள் அனைவருக்கும் கிள்ளானில் உள்ள துங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையின் வெளிநோயாளிப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் சிகிச்சை முடிந்து அவர்கள் வீடு திரும்பியதாகவும் பெர்னாமா செய்தி நிறுவனத்திடம் அவர் சொன்னார்.
காவல்துறை, தீயணைப்புப் படை, கிள்ளான் சுகாதார அலுவலகம் ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் சம்பவ இடத்தில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்துவருவதாக பெர்னாமா கூறியது.
முன்னதாக, கவனக்குறைவு, உரிம விதிமீறல் போன்றவை தொடர்பில் விசாரிக்கப்படுவதாக சிலாங்கூர் காவல்துறையை மேற்கோள்காட்டி மலேசிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டன.
அந்த வேதி ஆலை வளாகத்தில் சேமிக்கப்பட்டிருந்த வேதிப்பொருள்கள்தான் வெடிப்புக்குக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாகவும் கூறப்படுகிறது.

