புக்கெட்: புக்கெட் அனைத்துலக விமான நிலையத்தில் ஒரே நாளில் இரு மாதர்களிடம் மொத்தம் 32 கிலோகிராம் கஞ்சா செடிகளின் மலர்களை அதிகாரிகள் வியாழக்கிழமை (ஜூலை 9) பறிமுதல் செய்தனர்.
புக்கெட் விமான நிலைய சுங்கத் துறையும், காவல்நிலைய அதிகாரிகளும் ஒருங்கிணைந்து நடத்திய சோதனைகளில் அந்த இரு வெவ்வேறு பெண்களின் பயணப்பைகளில் மறைத்துவைக்கப்பட்டிருந்த போதைப்பொருள்களைக் கண்டு பிடித்தனர்.
தேவையான சுங்கத்துறை விதிமுறைகளையும் செயல்பாடுகளையும் பின்பற்றாமல் அந்த மலர்களை அம்மாதர்கள் கடத்த முயற்சி செய்தனர் என்று அதிகாரிகள் குற்றஞ்சாட்டினர்.
முதல் சம்பவத்தில் அன்றைய தினம் காலை 11 மணியளவில் லெவனா செல்சி குஸ்மான் என்ற 18 வயது பிலிப்பீன்ஸ் பெண்ணின் பயணப்பெட்டியில் பொட்டலங்கள் வடிவில் 14.5 கிலோகிராம் கஞ்சா பிடிபட்டு, அவர் கைது செய்யப்பட்டார்.
அடுத்த சம்பவத்தில் மதியம் ஒரு மணியளவில் தாய்லாந்தைச் சேர்ந்த பென்பிட்சா புட்சியாங் என்ற வயது குறிப்பிடப்படாத மாதின் பயணப்பெட்டி சோதனையிடப்பட்டதில் அதில் 17.6 கிலோகிராம் கஞ்சா மறைத்துவைக்கப்பட்டு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.
இரு மாதர்களும் பயணப்பெட்டியும் அதனுள் இருந்த பொருள்களும் தங்களுடையதுதான் என்பதை ஒப்புக்கொண்டனர்.
அவர்கள் இருவர் மீதும் சுங்கத் துறை நடைமுறை சட்டப்படியும், போதைப்பொருள் தடுப்புச் சட்டப்படியும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

