சோல்: தென்கொரியாவின் இஞ்சியோன் விமான நிலையத்தில் ஏற்பட்ட பெரிய கட்டமைப்புக் கோளாறு காரணமாக மூன்று சீன விமான நிறுவனங்களின் செயல்பாடுகள் முடங்கியதால் பயணிகள் அதிக நேரம் காத்திருக்க நேர்ந்தது.
அதையடுத்து வெள்ளிக்கிழமை (அக்டோபர் 30) மாலை பயணச்சீட்டுகள் வழங்குவதும் நுழைவாயில் சேவைகளும் மீண்டும் தொடங்கப்பட்டன.
பிற்பகல் வேளையில் வழக்கமான பயணச்சீட்டு வழங்கும் அமைப்புகள் முற்றிலும் முடங்கும் நிலைக்குச் சென்ற பிறகு, சைனா சதர்ன் ஏர்லைன்ஸ், சைனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ், ஏர் சீனா ஆகிய நிறுவனங்கள் மாலை 5.20 மணியளவில் செயல்பாடுகளை மீண்டும் தொடங்க முடிந்தது என்று இஞ்சியோன் அனைத்துலக விமான நிலையக் கழகம் தெரிவித்தது.
அமெரிக்காவைச் சேர்ந்த விமானப் போக்குவரத்துத் தகவல் தொடர்பு சேவை நிறுவனமான ஏரின்க்கின் உலகளாவிய கட்டமைப்பில் ஏற்பட்ட நிலைத்தன்மையின்மை காரணமாக, அதிகாலை 4:30 மணியளவில் அந்தத் தடை ஏற்பட்டது.
அதனால் முனையம் ஒன்றில் எட்டு, முனையம் இரண்டில் ஐந்து என மொத்தம் 13 விமான நிறுவனங்களுக்கு இணைப்புச் சிக்கல்கள் ஏற்பட்டன.
அதன் தாக்கம் மூன்று சீன விமான நிறுவனங்களில் மிகவும் தீவிரமாக இருந்ததால் குறைந்தது 35 விமானங்களின் சேவைகள் தாமதமடைந்தன.
