ஹனோய்: வியட்னாமின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ‘ஹாலோங் பே’யில் சனிக்கிழமை (ஜூலை 19) சுற்றுலாப் படகு ஒன்று கவிழ்ந்ததில் கிட்டத்தட்ட 37 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டு அரசாங்க ஊடகம் இத்தகவலை வெளியிட்டுள்ளது. அந்தப் படகில் பயணிகள் 48 பேரும் படகின் ஊழியர்களும் இருந்ததாகத் தெரிகிறது.
படகு, யுனெஸ்கோ மரபுடைத் தலமான ‘ஹாலோங் பே’யைச் சுற்றிவந்துகொண்டிருந்தபோது திடீரென கனமழை பெய்ததாகவும் அதையடுத்து அது கவிழ்ந்ததாகவும் ‘விஎன்எக்ஸ்பிரஸ்’ செய்தி இணையத்தளம் குறிப்பிடுகிறது.
படகில் இருந்தோரில் பெரும்பாலானோர் ஹனோயிலிருந்து குடும்பத்தோடு சுற்றுலா சென்றவர்கள் என்றும் பயணிகளில் 20 பேர் குழந்தைகள் என்றும் தெரிகிறது.
எல்லைக்காவல் படையினர் 11 பேரை உயிருடன் மீட்டுள்ளனர். 34 சடலங்கள் மீட்கப்பட்டதாக சனிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
பின்னர் ஞாயிற்றுக்கிழமை காலை மேலும் மூன்று சடலங்கள் மீட்கப்பட்டதாகக் கடற்படை தெரிவித்தது.
படகின் முதன்மை மாலுமி இன்னும் அடையாளம் காணப்படவில்லை. மேலும் ஐவரைக் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
மீட்கப்பட்ட சடலங்களில் எட்டுக் குழந்தைகளின் சடலங்களும் அடங்கும் என்று எல்லைக்காவல் படையினரை மேற்கோள்காட்டி ‘த பீப்பிள்ஸ் ஆர்மி நியூஸ்பேப்பர்’ தகவல் வெளியிட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் (சிங்கப்பூரில் பிற்பகல் 3 மணி) ‘விஃபா’ சூறாவளி தென்சீனக் கடலில் நுழைந்த சிறிது நேரத்தில் இந்த விபத்து நேர்ந்ததாகக் கூறப்படுகிறது. சூறாவளியால் அந்தப் பகுதியில் பலத்த காற்று வீசியதுடன் கனமழையும் மின்னலும் பதிவானதாகக் கூறப்பட்டது.
இரவு முழுவதும் மீட்புப் பணிகள் தொடர்ந்த நிலையில், உயிருடன் மீட்கப்பட்ட 10 வயதுச் சிறுவன், தண்ணீரில் தத்தளித்தபோது ராணுவத்தினர் தன்னை மீட்டதாகக் கூறினான்.
மாண்டோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்ட வியட்னாமியப் பிரதமர் ஃபாம் மின் சின், தேடல் மீட்புப் பணிகளை விரைவாக மேற்கொள்ளும்படி நாட்டின் தற்காப்பு, பொதுப் பாதுகாப்பு அமைச்சுகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.