தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

$404 பில்லியன் பருவநிலை நிதி: வளர்ந்துவரும் நாடுகள் அதிருப்தி

2 mins read
5b2ff9ef-2844-4798-80a7-f1f872d87da9
உச்சநிலை மாநாட்டில் அறிவிக்கப்பட்ட தொகை, பருவநிலை மாற்றத்தின் விளைவாக வளர்ந்து வரும் நாடுகள் எதிர்நோக்கும் சவால்களை சமாளிக்க போதுமானதாக இருக்காது என்று இந்தியப் பேராளர் குழுவின் பிரதிநிதி சாந்தினி ரைனா தெரிவித்தார். - படம்: ராய்ட்டர்ஸ்

பாக்கூ: ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் 29வது பருவநிலை மாற்ற உச்சநிலை மாநாடு அஸர்பைஜான் தலைநகர் பாக்கூவில் நடைபெற்றது.

பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளைச் சமாளிக்க வளர்ந்துவரும் நாடுகளுக்காக 300 பில்லியன் அமெரிக்க டாலர் (S$404 பில்லியன்) ஒதுக்கப்படும் என்று உச்சநிலை மாநாட்டில் அறிவிக்கப்பட்டது.

இந்தத் தொகை போதாது என்று வளர்ந்துவரும் நாடுகள் அதிருப்திக் குரல் எழுப்பியுள்ளன.

கடந்த இரண்டு வாரங்களாக மாநாட்டில் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதை ஐநாவின் பருவநிலைப் பிரிவுத் தலைவர் சைமன் ஸ்டியேல் சுட்டினார்.

எடுக்கப்பட்ட முடிவு மனிதாபிமானத்துக்கு காப்புறுதித் திட்டம் போல் நன்மைப் பயக்கும் என்றார் அவர்.

“வழங்கப்படும் தொகை தூய எரிசக்தித் துறையை மேலும் மேம்படுத்தும். இதன்மூலம் பில்லியன்கணக்கான உயிர்கள் பாதுகாக்கப்படும். பருவநிலை தொடர்பாக துணிச்சலாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் மூலம் கிடைக்கும் பலன்களை அனைத்து நாடுகளும் பகிர்ந்துகொள்ள இது உதவும். கூடுதல் வேலைகள், வலுவான வளர்ச்சி, அனைவருக்கும் மலிவான மற்றும் தூய்மையான எரிசக்தி ஆகியவற்றால் அனைத்து நாடுகளும் பலனடையும். ஆனால் இது காப்புறுதித் திட்டத்தைப் போன்றது. சந்தா தொகையை முழுமையாக, சரியான நேரத்துக்குள் செலுத்தினால் மட்டுமே பலன் அடைய முடியும்,” என்று திரு ஸ்டியேல் கூறினார்.

இதற்கிடையே, உச்சநிலை மாநாட்டில் அறிவிக்கப்பட்ட தொகை, பருவநிலை மாற்றத்தின் விளைவாக வளர்ந்து வரும் நாடுகள் எதிர்நோக்கும் சவால்களை சமாளிக்க போதுமானதாக இருக்காது என்று இந்தியப் பேராளர் குழுவின் பிரதிநிதி சாந்தினி ரைனா தெரிவித்தார்.

அறிவிக்கப்பட்ட தொகை மிகவும் குறைவு என்றும் அதை வழங்குவதற்கான காலம் கடந்துவிட்டது என்றும் அவர் கூறினார்.

“உச்சநிலை மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவு ஏமாற்றம் அளிக்கிறது. பொறுப்புடன் இருந்து கடமையாற்ற வளர்ந்த நாடுகளுக்கு விருப்பமில்லை என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது,” என்று இந்தியாவின் பொருளியல் விவகாரத்துறையின் ஆலோசகரான திருவாட்டி ரைனா தெரிவித்தார்.

ஒதுக்கப்படும் தொகை அறிவிக்கப்பட்டதற்கு முன்பு இந்தியப் பேராளர் குழுவை உச்சநிலை மாநாடு பேச அனுமதிக்கவில்லை என்று அவர் குறைகூறினார்.

குறிப்புச் சொற்கள்