தைவானைச் சுற்றி ஒரே நாளில் 45 சீனப் போர் விமானங்கள்

தைவானைச் சுற்றி ஒரே நாளில் 45 சீனப் போர் விமானங்கள்

2 mins read
0a2c36ab-dfa0-41e5-85f4-bde59a689d5b
படம். - தமிழ் முரசு

தைப்பே: தைவானைச் சுற்றி 45 சீனப் போர் விமானங்கள் வட்டமிட்டதாக அந்நாடு புதன்கிழமை (மே 15ஆம் தேதி) அன்று கூறியது.

இதுவே இவ்வாண்டில் ஒரே நாளில் மிக அதிகமான சீனப் போர் விமானங்கள் தைவானை வட்டமிட்ட சம்பவம் என்று அந்நாடு தெரிவித்தது.

புதிய தைவானிய அதிபர் இன்னும் ஒரு வாரத்தில் பதவியேற்க உள்ள நிலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சுதந்திர நாடாக உள்ள தைவானை சீனா தனக்கு சொந்தம் கொண்டாடி வருவதுடன் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபரை அது பிரிவினைவாதி என்று கூறி வருகிறது.

ஆனால், அந்நாடு தனது பகுதி என்று சீனா சொந்தம் கொண்டாடி வருவதை தைவான் தொடர்ந்து நிராகரித்து வந்துள்ளது.

தற்போதைய துணை அதிபரும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபருமான லாய் சிங் அந்நாட்டுக்கு போரையும் அழிவையும் கொண்டு வருவார் என்று சீனா கூறி வருகிறது. புதிய அதிபர் கடந்த ஜனவரி மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வந்துள்ளது நினைவுகூரத்தக்கது.

புதன்கிழமை (மே 15ஆம் தேதி) அன்று தைவானைச் சுற்றி 45 சீனப் போர் விமானங்கள், ஆறு போர்க்கப்பல்கள் காணப்பட்டதாக தைவானிய தற்காப்பு அமைச்சு கூறியது.

“26 போர் விமானங்கள் தைவான் நீரிணையின் மையப்பகுதியை தாண்டின,” என்று தைவானிய தற்காப்பு அமைச்சு இரு நாடுகளுக்கும் நடுவில் இருக்கும் நீரிணைப் பகுதி குறித்து அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

இதில் நிலைமையை தான் கவனித்து தகுந்த நடவடிக்கை எடுத்ததாக தைவானிய அமைச்சு விளக்கியது.

குறிப்புச் சொற்கள்