கூலாய்: சட்டவிரோத வெளிநாட்டு ஓட்டுநர்களைக் குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஜோகூர் சாலைப் போக்குவரத்துத் துறை (ஜேபிஜே), 459 வெளிநாட்டினர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.
பொதுமக்களின் புகார்கள் அதிகரித்து வரும் நிலையில், வெளிநாட்டு வாகன ஓட்டிகள் சம்பந்தப்பட்ட போக்குவரத்துக் குற்றங்களைத் தடுக்க ஜனவரி 1 முதல் 23ஆம் தேதி வரை ஜோகூர் சாலைப் போக்குவரத்துத் துறை, சட்டவிரோத வெளிநாட்டு ஓட்டுநர்களுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொண்டதாக ஜோகூர் ஜேபிஜே இயக்குநர் ஸுல்கர்னைன் யாசின் தெரிவித்தார்.
“இந்த நடவடிக்கையின்கீழ், ஜோகூர் ஜேபிஜே, 1,109 வாகனங்களை ஆய்வு செய்து பல்வேறு குற்றங்களுக்காக 459 நோட்டீசுகளை வழங்கியது. அத்துடன், 235 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
“பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களில் 152 மோட்டார் சைக்கிள்கள், 69 கார்கள், 11 லாரிகள், மூன்று வேன்கள் ஆகியவை உள்ளடங்கும்,” என்று வெள்ளிக்கிழமை (ஜனவரி 23) ஜோகூர் பாருவில் உள்ள ஜேபிஜே ஆயர் பெம்பன் அமலாக்க நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.
உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல் (325 நபர்கள்), காலாவதியான மோட்டார் வாகன உரிமங்கள் அல்லது சாலை வரி (202 நபர்கள்), காப்பீட்டு பாதுகாப்புத் தொகை இல்லாதது (185 நபர்கள்) ஆகியவையே கண்டறியப்பட்ட மிகப்பொதுவான குற்றங்கள் என்று ஸுல்கர்னைன் கூறினார்.
வாழ்க்கைத்தொழில் வானகவோட்டும் உரிமங்கள் சம்பந்தப்பட்ட மேலும் 184 குற்றங்களையும் அவர் சேர்த்தார்.
பகுப்பாய்வின்படி, அதிக எண்ணிக்கையிலான பாகிஸ்தானியர்கள் 195 பேர் குற்றவாளிகளாக உள்ளனர். அதைத் தொடர்ந்து பங்ளாதேஷியர் (110), இந்தோனீசியர்கள் (99), மியன்மார் நாட்டினர் (23), நேப்பாளிகள் (15) மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்தோர் (17) ஆகியோர் உள்ளனர் என்றும் ஸுல்கர்னைன் தெரிவித்தார்.
இதற்கிடையே, கடந்த ஆண்டு பல்வேறு அமலாக்க நடவடிக்கைகள் மூலம் 495,779 வாகனங்களை ஆய்வு செய்ததாகவும், அவற்றில் 114,153 வாகனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததாகவும் ஸுல்கர்னைன் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
மொத்தம் 242,451 குற்ற அறிக்கைகளும் வழங்கப்பட்டன. அதே நேரத்தில் வாகன உரிமக் குற்றங்கள் அதிகம் பதிவு செய்யப்பட்ட குற்றங்களாக 62,608 வழக்குகளில் பதிவு செய்யப்பட்டன. அவற்றில் காலாவதியான வாகன உரிமங்கள் மற்றும் காப்பீட்டுத் தொகை உள்ளடங்கவில்லை.
“ஜோகூர் ஜேபிஜே பல்வேறு கடுமையான குற்றங்களுக்காக 2,075 வாகனங்களையும் பறிமுதல் செய்தது. லாரிகளில் அளவுக்கு அதிகமான பாரத்தை ஏற்றியதற்காக 9,575 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டன,” என்றும் அவர் கூறினார்.

