ஜோகூர் பாரு: இவ்வாண்டு ஜூலை மாதம் வரை நாடு முழுவதும் 4,646 குடும்ப வன்முறைச் சம்பவங்கள் பதிவானதாக மலேசிய மாதர், குடும்ப, சமூக மேம்பாட்டுத் துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் தெரிவித்துள்ளார்.
அவற்றில் 823 சம்பவங்கள் ஜோகூர் மாநிலத்தில் இடம்பெற்றவை என்று அவர் கூறினார். அந்த எண்ணிக்கை, இதே காலகட்டத்தில் சென்ற ஆண்டு பதிவான 518ஐவிட அதிகம் என்றும் அவர் சொன்னார்.
இது, மேலும் வலுவான தடுப்பு நடவடிக்கைகள், முன்கூட்டியே தலையிட்டு எடுக்கவேண்டிய நடவடிக்கைகளுக்கான தேவையைச் சுட்டிக்காட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.
குடும்ப வன்முறையின் தாக்கம்
“குடும்ப வன்முறை என்பது வீட்டில் கதவுகளுக்குப் பின்னால் நடப்பதாகும். ஆனால், அதன் தாக்கம் உடல்ரீதியான பாதுகாப்பில் மட்டும் தாக்கத்தை ஏற்படுத்தாது. அது ஒரு பெண்ணின் சுய மரியாதை, தன்னம்பிக்கை, உணர்ச்சிகள், உடல்நலன் ஆகியவற்றையும் பாதிக்கும்,” என்று அவர் சனிக்கிழமை (செப்டம்பர் 12) ஜோகூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கூறினார்.
குடும்ப வன்முறை என்பது உடல்ரீதியான துன்புறுத்தல் மட்டும் அல்ல என்றும் அது மனநல, பாலியல், நிதி போன்ற வகையிலும் இருக்கலாம் என்றும் திருவாட்டி லிம் சுட்டினார். ஒருவரின் நடவடிக்கைகள், வாழ்க்கை, உறவுகள் ஆகியவற்றை அளவுக்கதிகமாகக் கட்டுப்படுத்துவதும் அதில் அடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். மின்னிலக்கத் தளங்கள் வாயிலாக அதைச் செய்வதையும் அது உள்ளடக்கும் என்றார் அவர்.
தவறவிடக்கூடிய அறிகுறிகள்
முதலில் சாதாரணமாகத் தென்படும் அளவுக்கதிகமான ஆதிக்கம், மிரட்டல்கள், இழிவுபடுத்துதல் போன்றவற்றிலிருந்து குடும்ப வன்முறை தொடங்கலாம் என்றும் திருவாட்டி லிம் கூறினார். தொடக்கத்திலேயே இருக்கும் அறிகுறிகளை அடையாளம் கண்டு நிலைமை மோசமடைவதற்குள் உதவி நாடுமாறு அவர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.
திட்டங்கள்
குடும்ப வன்முறை தொடர்பில் பொதுமக்களின் புரிந்துணர்வை அதிகரிப்பது, ஆதரவுத் தளங்கள் குறித்த விழிப்புணர்வை அவர்களிடையே ஏற்படுத்துவது, உதவி தேவைப்படும் சூழல்களை எதிர்நோக்கும்போது நடவடிக்கை எடுக்க அவர்களை ஊக்குவிப்பது ஆகியவை அக்கு வனிட்டா@கேஆர்டி (Aku Wanita@KRT) திட்டத்தின் இலக்கு என்றும் திருவாட்டி லிம் விளக்கினார்.
அதோடு, பெண்கள் அரசாங்கம் மற்றும் அது தொடர்பான அமைப்புகளின் சேவைகளை மேலும் எளிதில் பெற பிரிசம்அனிட்டா (PRISMAnita) திட்டத்தைத் தமது அமைச்சு தொடங்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

