ஜோகூர் பாரு: மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் பாழடைந்த நிலையில் இருக்கும் 47 மருந்தகங்களை மாநில அரசாங்கம் புதுப்பிக்கத் திட்டமிட்டுள்ளது.
புதுப்பிப்புப் பணிகளுக்கு மலேசிய மத்திய அரசாங்கம் 30 மில்லியன் ரிங்கிட் (9.12 மில்லியன் வெள்ளி) நிதி ஒதுக்கியிருப்பதாக நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் போன்ற ஊடகங்கள் தெரிவித்துள்ளன. உள்கட்டமைப்பு தொடர்பான பணிகள், பழைய முறைகளை மாற்றுவது போன்றவை புதுப்பிப்புப் பணிகளில் அடங்கும் என்றார் ஜோகூர் சுகாதார, சுற்றுப்புறக் குழுத் தலைவர் லிங் டியென் சூன்.
புதுப்பிப்புப் பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளி கோரும் நடவடிக்கை வரும் மார்ச் மாதம் தொடங்கும் என்று அவர் தெரிவித்தார். அக்டோபர் மாதத்துக்குள் ஒப்பந்தப்புள்ளி நடவடிக்கை நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
“புதுப்பிப்புப் பணிகளுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் 47 பாழடைந்த மருந்தகங்களை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம்,” என்று திரு லிங் சனிக்கிழமையன்று (ஜனவரி 18) நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது குறிப்பிட்டார்.
கடந்த 2023ஆம் ஆண்டிலிருந்து ஜோகூர், மலேசியா முழுவதும் இருக்கும் 98 மருந்தகங்களைப் புதுப்பித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.