மோசடி மையங்களில் இருந்து தப்பிய 500 இந்தியர்கள் இந்தியா அனுப்பப்படுவர்: தாய்லாந்து

2 mins read
0d373614-3085-4081-913d-e65b1d5b0e54
மியன்மார் எல்லைப் பகுதியில் செயல்பட்ட கேகே பார்க் மோசடி மையத்தில் அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதை அடுத்து, அங்கு பணிபுரிந்தவர்கள் ஆற்றைக் கடந்து தாய்லாந்துக்குள் சென்றனர். - படம்: ஏஎஃப்பி

பேங்காக்: மோசடி மையத்தில் சிக்கிய 500 இந்திய நாட்டவர்களை இந்தியாவுக்குத் திருப்பியனுப்ப இருப்பதாகத் தாய்லாந்து பிரதமர் புதன்கிழமை (அக்டோபர் 29) தெரிவித்துள்ளார்.

மியன்மார் மோசடி மையத்தில் நடத்தப்பட்ட அதிரடித் தாக்குதலைத் தொடரந்து அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் தாய்லாந்துக்குத் தப்பியோடினர்.

“ஏறக்குறைய 500 இந்தியர்கள் மே சோட்டில் உள்ளனர்,” என்று தாய்லாந்துப் பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் செய்தியாளர்களிடம் கூறினார்.

தன் குடிமக்களை இந்தியா அழைத்துச் செல்ல இந்திய அரசு விமானத்தை அனுப்ப உள்ளதாக அவர் கூறினார்.

நிர்வாகக் கெடுபிடிகள் அதிகம் இல்லாத மியன்மார் எல்லைகளில் செயல்பட்டுவரும் மோசமான மையங்களில் ஒன்றான கேகே பார்க்கில் அதிரடிச் சோதனை நடத்தப்பட்டது. நூற்றுக்கணக்கானவர்கள் எல்லைப்புற ஆற்றைக் கடந்து தாய்லாந்து நகரமான மே சோட்டுக்கு தப்பினர்.

கேகே பூங்காவில் அதிரடிச் சோதனை தொடங்கியதிலிருந்து செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 28) மாலை வரையில் 28 நாடுகளைச் சேர்ந்த 1,500க்கும் மேற்பட்டோர் தாய்லாந்துக்குச் சென்றதாக எல்லை மாகாணமான தக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மோசடி மையங்களில் பணிபுரியும் பலர் தாங்கள் கடத்தப்பட்டதாகக் கூறுகிறார்கள், எனினும், கவர்ச்சிகரமான சம்பளங்களுக்காகவும் ஊழியர்கள் தாங்களாகவே விரும்பிச் செல்வதாகவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

தங்களுக்கு லாபமாக இருப்பதால் மியான்மார் ராணுவம் நீண்ட காலமாக மோசடி மையங்களைக் கண்டுகொள்ளாமல் விட்டுவைத்துள்ளதாக நிபுணர்கள் குறிப்பிட்டனர்.

ஆனால் அந்நாட்டு ராணுவத்திற்கு ஆதரவளிக்கும் சீனா, அதன் குடிமக்கள் மோசடிகளில் பங்கேற்பதையும் மோசடிக்கு இலக்காவதையும் கண்டு எரிச்சலடைந்ததால், மோசடி மையங்களை மூட அழுத்தம் கொடுத்தது.

பிப்ரவரி மாத அமலாக்க நடவடிக்கையில் கிட்டத்தட்ட 7,000 ஊழியர்கள் தாயகம் திரும்பினர்.

குறிப்புச் சொற்கள்