எல்லைச் சண்டையில் 500,000 பேர் இடம்பெயர்ந்தனர்

1 mins read
632b10d7-727f-4915-afa1-6bfc6dc71650
தாய்லாந்துடனான எல்லையில் நீடிக்கும் சண்டையால் செல்லப் பிராணிகள், குழந்தைகளுடன் வெளியேறும் கம்போடியாக் குடும்பம். - படம்: ஏஎஃப்பி

நோம் பென்: அண்டை நாடான தாய்லாந்து எல்லையில் இரண்டு வாரமாக நீடிக்கும் மோதல்களால் கம்போடியாவில் அரை மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வீடுகளைவிட்டு இடம்பெயர்ந்துள்ளனர் என்று கம்போடிய உள்துறை அமைச்சு ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 21) தெரிவித்தது.

தாய்லாந்தின் எஃப்-16 வகைப் போர் விமானங்கள் மேற்கொள்ளும் ஆகாயத் தாக்குதல், குண்டு வீச்சு, ஏவுகணைத் தாக்குதலிலிருந்து தப்பிக்க தங்கள் வீடுகள், பள்ளிகளிலிருந்து பெண்கள், குழந்தைகள் உட்பட 518,611 பேர் இடம்பெயர்ந்ததாக அது கூறியது.

இந்நிலையில் மீண்டும் வெடித்துள்ள எல்லை மோதலால் ஏறக்குறைய 400,000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகத் தாய்லாந்து அரசாங்கம் கூறியுள்ளது.

டிசம்பரில் தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையே மோதல் வெடித்தது. பீரங்கிகள், வானூர்திகளைக் கொண்டு ஒன்று மற்றதைத் தாக்கின. இந்தச் சண்டையில் தாய்லாந்தில் 22 பேரும் கம்போடியாவில் 19 பேரும் உயிரிழந்தனர் என்று அந்தந்த நாடுகளின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

காலனித்துவ காலத்தில் நிர்ணயிக்கப்பட்ட 800 கி.மீ. எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பழங்கால கோயில் இடிபாடுகளின் ஒரு பகுதி உள்ளிட்ட எல்லைப் பகுதி சர்ச்சையால் இரு நாடுகளுக்கு இடையே மோதல் வெடித்தது.

ஜூலை மாதத்தில் இரு நாடுகளுக்கு இடையே ஐந்து நாட்களாக நீடித்த சண்டையில் 12க்கு அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

சீனா, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, சிங்கப்பூர், ஆசியான் வட்டார கூட்டமைப்புக்குத் தலைமை தாங்கும் மலேசியா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.

கம்போடியா சியாம் ரீப் மாநிலத்தில் ஆகாயத் தாக்குதல் நடத்தப்பட்டதால் மக்கள் வெளியேறும் இப்படத்தை கம்போடிய கம்புச்சியா ஊடகம் வெளியிட்டது.
கம்போடியா சியாம் ரீப் மாநிலத்தில் ஆகாயத் தாக்குதல் நடத்தப்பட்டதால் மக்கள் வெளியேறும் இப்படத்தை கம்போடிய கம்புச்சியா ஊடகம் வெளியிட்டது. - படம்: ஏஎஃப்பி
குறிப்புச் சொற்கள்