வியட்னாம் வெள்ளம், நிலச்சரிவு: மாண்டோர் எண்ணிக்கை 55 ஆனது

1 mins read
b844a396-cc8a-4322-b0a6-3873080d2eed
ஹன் ஹுவா மாநிலத்தின் நா டிராங் பகுதியில் படகு மூலம் மீட்கப்படும் மக்கள். - படம்: இபிஏ

ஹனோய்: வியட்னாமின் மத்தியப் பகுதியில் பெய்த இடைவிடா மழையால் ஏற்பட்ட வெள்ளத்திலும் நிலச்சரிவிலும் சிக்கி மாண்டோர் எண்ணிக்கை 55ஆக உயர்ந்துவிட்டது.

மேலும் 13 பேரைக் காணவில்லை என்று அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை அமைப்பு சனிக்கிழமை (நவம்பர் 22) தெரிவித்தது.

மத்திய வியட்னாமின் சில பகுதிகளில் கடந்த வாரம் 1,900 மில்லிமீட்டருக்கும் அதிகமாக மழை கொட்டித் தீர்த்தது.

காப்பி அதிகம் பயிரிடப்படும் அந்த வட்டாரத்தில்தான் புகழ்பெற்ற கடற்கரைகளும் உள்ளன. அதே நேரத்தில், அங்குப் புயல், வெள்ள பாதிப்பு அபாயமும் அதிகம்.

மலைப்பாங்கான டக் லக் மாநிலத்தில் 27 பேரும் ஹன் ஹுவா மாநிலத்தில் 11 பேரும் மாண்டுவிட்டனர்.

வெள்ளத்தால் நாட்டின் பொருளியலுக்கு 8.98 டிரில்லியன் டோங் (S$341 மில்லியன்) இழப்பு ஏற்பட்டுள்ளதாக வியட்னாம் அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது.

235,000க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது என்றும் கிட்டத்தட்ட 80,000 ஹெக்டர் பரப்பளவிலான பயிர்கள் சேதமடைந்துவிட்டன என்றும் பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.

வெள்ளம் வடியத் தொடங்கியுள்ள நிலையில் மரங்களிலும் வீடுகளின் கூரைகளிலும் இருக்கும் மக்களை மீட்கும் பணியில் மீட்புப் பணியினர் ஈடுபட்டு வருகின்றனர்.

வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் பல்வேறு நெடுஞ்சாலைகளும் முடங்கிப் போயுள்ளன. ஏறக்குறைய 300,000 பேர் மின்சாரமின்றித் தவிக்கின்றனர்.

இவ்வாண்டின் முதல் பத்து மாதங்களில் இயற்கைப் பேரிடர்கள் காரணமாக வியட்னாமில் 279 பேர் மாண்டுவிட்டனர் அல்லது காணவில்லை என்றும் இரண்டு பில்லியன் அமெரிக்க டாலருக்குமேல் சேதம் ஏற்பட்டுள்ளது என்றும் அந்நாட்டின் தேசிய புள்ளிவிவர அலுவலகம் தெரிவிக்கிறது.

குறிப்புச் சொற்கள்