ரஷ்யாவின் போர்முனைக்குக் கடத்தப்பட்ட 58 இந்தோனீசியர்கள்

ரஷ்யாவின் போர்முனைக்குக் கடத்தப்பட்ட 58 இந்தோனீசியர்கள்

படம்: டெம்ப்போ.காம் / இந்தோனீசியா

03 Nov 2026 - 6:00 pm

2 mins read

ஜகார்த்தா: ரஷ்யாவில் உள்ள போர்க்களங்களில் கூலிப்படையினராகப் பணியாற்ற 58 இந்தோனீசியர்கள் அங்கு கடத்தப்பட்டதாக இந்தோனீசிய அதிகாரிகள் திங்கட்கிழமை (நவம்பர் 2) தெரிவித்தனர். அக்குற்றச் செயலில் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் இரு ரஷ்யர்கள், ஓர் உக்ரேனியர் உட்பட 13 நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இந்தோனீசிய தேசியக் குற்றவியல் விசாரணைத் துறை தெரிவித்துள்ளது.

அக்குற்றவியல் விசாரணைத் துறையின் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், மனிதக் கடத்தல் தடுப்பு விசாரணைப் பிரிவின் இயக்குநர் நுருல் அஸீசா இக்கடத்தல் சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் விவரித்தார்.

வெளிநாடுகளில் சிறந்த சம்பளத்துடன் வேலைகள் உள்ளதாக சமூக ஊடகங்கள், வேலைவாய்ப்பு வழங்கும் செயலிகள், இணையம் போன்றவற்றில் அக்குற்றவாளிகள் விளம்பரப்படுத்தியுள்ளனர்.

“வெளியுறவு அமைச்சுடனும் இந்தோனீசியக் காவல்துறையின் அனைத்துலக உறவுகள் பிரிவோடும் நாங்கள் ஒருங்கிணைந்து, அனைத்து நடவடிக்கைகளையும் மறுஆய்வு செய்துவருகிறோம்,” என்று அவர் செய்தியாளர் கூட்டத்தில் தொரிவித்தார்.

தளவாடம், எல்லைப் பாதுகாப்பு, தற்காப்புக் கட்டுமானம் போன்ற துறைகளில் பணிகள் உள்ளன என்று ஆசைகாட்டி பாதிக்கப்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. ஆள்சேர்ப்புக்கான நடைமுறைகள் முடிந்தபிறகு அவர்கள் ரஷ்யாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

அங்கு அவர்கள் கூலிப்படைக்கான ஒப்பந்தகங்களில் கையெழுத்திட வற்புறுத்தப்பட்டு அதன்பின் அவர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்பட்டன. பயிற்சிகள் முடிவடைந்ததும் போர்முனைகளில் அவர்கள் பணியாற்ற வேண்டியதாயிற்று.

“கடத்தப்பட்ட இந்தோனீசியர்கள் நேரடிக் கூலிப்படையினராக பணியமர்த்தப்படவில்லை என்பது உண்மைதான். இருந்தாலும் போர்முனையில் தளவாடத்துறை ஊழியர்களாக அவர்கள் பயன்படுத்தப்பட்டனர்,” என்று செய்தியாளர்களிடம் திருவாட்டி நுருல் தெரிவித்தார்.

கடத்தப்பட்டோருக்கு ஒரு மாதச் சம்பளமாக S$3,800 (US$3,000) கிடைக்கும் எனவும் பணியில் இணையும்போது ‘போனஸ்’ தொகையாக S$44,800 (US$35,000) வழங்கப்படும் எனவும் வாக்குறுதிகள் தரப்பட்டன.

குறிப்புச் சொற்கள்