ஜெருசலம்: காஸா மீது இஸ்ரேலிய விமானப் படை நடத்திய இரவுநேரத் தாக்குதலில் குறைந்தது 58 பாலஸ்தீனர்கள் மாண்டனர்.
இத்தகவலை பாலஸ்தீன சுகாதாரத்துறை அதிகாரிகள் சனிக்கிழமை (மே 17) வெளியிட்டனர்.
இஸ்ரேலியத் தாக்குதல் காரணமாக வெள்ளிக்கிழமை முதல் (மே 15) 300க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் மாண்டுவிட்டனர்.
கடந்த மார்ச் மாதம் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததை அடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு எதிரான தாக்குதல்களை இஸ்ரேல் தொடர்கிறது.
இஸ்ரேலியத் தாக்குதல்களில் பல கட்டடங்கள் இடிந்து விழுந்ததாகவும் பலர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருப்பதாகவும் காஸாவின் வடக்குப் பகுதியில் உள்ள இந்தோனீசிய மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் மார்வான் அல் சுல்தான் கூறினார்.
மருத்துவமனையில் உள்ள நிலவரம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு மிகவும் மோசமாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
தாக்குதல்களை காஸா முனைக்கும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் வெள்ளிக்கிழமை (மே 16) கூறியது.
இதற்காக வான்வழித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளதாகவும் ராணுவ வீரர்களை அனுப்பிவைத்துள்ளதாகவும் அது தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
எல்லைப் பகுதியில் தனது கவச வாகனங்களை இஸ்ரேலிய ராணுவம் நிறுத்திவைத்துள்ளது.
ஹமாஸ் அமைப்பைத் தோற்கடித்து பிணைக்கைதிகளை மீட்பதே இலக்கு என்று அது கூறியது.
மத்திய கிழக்கிற்குப் பயணம் மேற்கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் பயணத்தை முடித்துக்கொள்வதற்கு முன்பு இத்தாக்குதல் நடத்தப்படாது என்று மே மாதம் தொடக்கத்தில் இஸ்ரேலியத் தற்காப்பு அமைச்சைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, காஸா முனைக்கு அத்தியாவசியப் பொருள்கள் சென்றடைய முடியாதபடி இஸ்ரேல் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளால் காஸா மக்கள் பஞ்சத்தால் பாதிப்படையக்கூடும் என்று ஐக்கிய நாடுகள் நிறுவனத்தைச் சேர்ந்த நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

