தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தென் பிலிப்பீன்ஸ் அருகே 6.0 ரிக்டர் அளவு நிலநடுக்கம்

1 mins read
48026737-6521-45dd-bd4e-5095f5846a7a
முன்னதாக வெள்ளிக்கிழமை (அக்டோபர் 10) மிண்டானாவ் வட்டாரத்தை உலுக்கிய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம். - படம்: ஏஎஃப்பி

மணிலா: தென் பிலிப்பீன்சுக்கு அருகே உள்ள பகுதியை சனிக்கிழமை (அக்டோபர் 11) இரவு ரிக்டரில் 6.0 அளவிலான நிலநடுக்கம் உலுக்கியதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு நிலையம் (யுஎஸ்ஜிஎஸ்) தெரிவித்துள்ளது.

சுரிகாவ் டெல் சூர் மாநிலத்தில் உள்ள கக்வாய்ட் நகருக்கு சுமார் 10 கிலோமீட்டர் அப்பால் உள்ள பகுதியை நிலநடுக்கம் உலுக்கியது. 59 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிர்ச் சேதம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை என்று கக்வாய்ட் தீயணைப்பு அதிகாரி ஒருவர் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

“இந்த நிலநடுக்கம் அதிக நேரம் நீடிக்கவில்லை. கிட்டத்தட்ட 30 விநாடிகள்தான் நீடித்தது. ஆனால், திடீரென வீரியத்துடன் உலுக்கியது,” என்றார் ஆர்னெல் பெசிங்கா என்ற அந்த அதிகாரி.

ஒரு நாளுக்கு முன்பு மிண்டானாவ் வட்டாரத்தின் மனாய் நகருக்கு அருகே உள்ள பகுதியை முறையே 6.7 ரிக்டர், 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கங்கள் உலுக்கின. சனிக்கிழமை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் அவற்றுக்குப் பின் நிகழ்ந்த நில அதிர்வுகளா என்பது தெரியவில்லை.

மிண்டானாவுக்கு அருகே ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது எட்டுப் பேர் கொல்லப்பட்டனர்.

அண்மையில் மத்திய பிலிப்பீன்சில் இருக்கும் சிபு மாநிலத்தை உலுக்கிய மோசமான நிலநடுக்கத்தால் 75 பேர் கொல்லப்பட்டனர், 1,200க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். அதனைத் தொடர்ந்து வரிசையாக நிலநடுக்கங்கள் பிலிப்பீன்சை உலுக்கியிருக்கின்றன.

குறிப்புச் சொற்கள்