மணிலா: ரிக்டரில் 6.3 அளவிலான நிலநடுக்கம் பிலிப்பீன்சை உலுக்கியுள்ளது.
செவ்வாய்க்கிழமை (ஜூன் 24) தென் பிலிப்பீன்சுக்கு அருகே நிலநடுக்கம் உணரப்பட்டதாக அமெரிக்க நிலவியல் ஆய்வு அமைப்பு (யுஎஸ்ஜிஎஸ்) தெரிவித்தது. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.
டவாவ் தீவின் கிழக்குப் பகுதிக்கு சுமார் 374 கிலோமீட்டருக்கு அப்பால் அதிக ஆழமில்லாத நிலநடுக்கம் உலுக்கியதாக யுஎஸ்ஜிஎஸ் குறிப்பிட்டது. உயிரிழப்பு ஏற்பட்டதாகவோ சேதம் ஏற்பட்டதாகவோ உடனடியாகத் தகவல் ஏதும் இல்லை.
நிலநடுக்கம் உலுக்கியதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்று பிலிப்பீன்ஸ் எரிமலை, நிலநடுக்கக் கல்விக் கழகம் (Philippine Institute of Volcanology and Seismology) தெரிவித்தது.
பிலிப்பீன்சை நிலநடுக்கம் அடிக்கடி உலுக்குவதுண்டு. ரிங் ஆஃப் பையர் என்றழைக்கப்படும், நிலநடுக்கத்தை ஏற்படுத்தும் நிலத்தடிக் ‘குமுறல்கள்’ அதிகம் இடம்பெறும் வட்டாரத்தில் அந்நாடு அமைந்துள்ளது அதற்குக் காரணம்.
ரிங் ஆஃப் ஃபையர், ஜப்பானில் தொடங்கி தென்கிழக்காசியா, பசிபிக் பேசின் வட்டாரங்களுக்கு நீடிக்கிறது.
பிலிப்பீன்சை உலுக்கும் பெரும்பாலான நிலநடுக்கங்களும் இலேசானவை. அவற்றை மனிதர்கள் அதிகம் உணரக்கூடமாட்டார்கள்.
கடைசியாக 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் பிலிப்பீன்சை மோசமான நிலநடுக்கம் உலுக்கியது. ரிக்டரில் 7 அளவிலான அந்த நிலநடுக்கத்துக்குக் குறைந்தது 11 பேர் பலியாயினர், அதில் 609 பேர் காயமுற்றனர்.