மலேசியாவில் சிக்கிய 6 டன் எடையுள்ள போதைப் பொருள்கள்

2 mins read
40d308ed-29f3-4c38-aea4-34540683afec
மலேசிய அதிகாரிகள் கிட்டத்தட்ட 6 டன் எடையுள்ள போதைப் பொருள்களைக் கைப்பற்றியுள்ளனர். - படம்: ஏஎஃப்பி

காஜாங்: மலேசிய அதிகாரிகள் கிட்டத்தட்ட 6 டன் எடையுள்ள போதைப்பொருள்களைக் கைப்பற்றியதுடன் மிகப் பெரிய அனைத்துலக போதைக் கடத்தல் கும்பலின் திட்டத்தை முறியடித்துள்ளனர்.

சிலாங்கூர், கோலாலம்பூர் ஆகியவற்றில் நடத்தப்பட்ட சோதனைகள் மூலம் 1.04 பில்லியன் ரிங்கிட் அதாவது சிங்கப்பூர் நாணயத்தில் $330 மில்லியன் மதிப்புள்ள போதைப் பொருள்களை அதிகாரிகள் மடக்கிப் பிடித்தனர்.

டிசம்பர் 21ஆம் தேதி போதைப்பொருள்களைக் கண்டறிவதற்காக அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின்போது சிறிய மோசடி நிலையம் ஒன்றும் அகப்பட்டது.

சிலாங்கூரின் காஜாங் நகரில் நடத்தப்பட்ட சோதனையின்போது மோசடி நிலையம் அம்பலமானதாக புக்கிட் அம்மான் போதைப்பொருள் குற்ற விசாரணைப் பிரிவு இயக்குநரான ஆணையர் ஹுசெயின் ஓமார் கான் கூறினார்.

சோதனையில் சந்தேகத்துக்குரிய 14 பேரைத் தடுத்து வைத்ததாகக் கூறிய அவர், போதைப்பொருள் கும்பல் பெரும்பாலும் மோசடிக் கும்பலாகவும் செயல்பட்டதாகத் தெரிகிறது என்றார்.

சந்தேக நபர்கள் வர்த்தகக் குற்ற விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏற்கெனவே இதற்குமுன் இம்மாதம் 16ஆம் தேதி அதிகாரிகள் நடத்திய சோதனை நடவடிக்கையில் 1.53 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள்கள் சிக்கின. அந்தச் சம்பவத்தில் ஆறு பேர் தடுத்து வைக்கப்பட்டனர்.

அந்தக் கும்பலில் எஞ்சியுள்ளோரைப் பிடிக்க இம்மாதம் 21ஆம் தேதி அதிகாரிகள் மற்றொரு சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.

அண்மையில் நடந்த சோதனை கெம்பாங்கானில் உள்ள தொழிற்பூங்காவிலும் கெபொங்கில் உள்ள தொழிற்பேட்டையிலும் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

அண்மைய சோதனை நடவடிக்கையில் கைப்பற்றப்பட்ட போதைப் பொருள்கள் ஏறக்குறைய 20.7 மில்லியன் பேரிடம் விநியோகம் செய்யப்பட்டிருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது.

போதைப் பொருள் கும்பலைக் கிழக்கத்திய நாடு ஒன்றைச் சேர்ந்தவர் செயல்படுத்துவதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

போதைப் பொருளை உருவாக்குவோர் ஒரே நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற அதிகாரிகள், மலேசியாவில் அவற்றைத் தயாரித்து ஹாங்காங், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு அவை விநியோகம் செய்யப்படுவதாகச் சந்தேகிக்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்