கூச்சிங்: மலேசியர்களில் 61 விழுக்காட்டினரிடம் அவசரத் தேவைகளுக்காகக் குறைந்தபட்சம் 1,000 ரிங்கிட் சேமிப்புகூட இல்லை என 2024க்கான மலேசிய மத்திய வங்கி அறிக்கை தெரிவிக்கிறது.
எதிர்பாராத சூழல்களைச் சமாளிக்க மக்கள்தொகையில் கணிசமான பகுதியினரிடம் போதுமான சேமிப்பு இல்லை என்பதையே இது காட்டுகிறது என அந்நாட்டின் துணைப் பிரதமர் ஃபாடில்லா யூசோஃப் கூறினார். மேலும், வேலை இழப்பு நேர்ந்தால் மூன்று மாதச் செலவுகளை ஈடுகட்டும் சேமிப்பு 37 விழுக்காட்டு மலேசியர்களிடம் இல்லை என்றார் அவர்.
மலேசிய மத்திய வங்கி வெளியிட்ட விவரங்கள் காட்டும் சவால்களில் இவையும் அடங்கும் என்பதால், நிதியறிவு மிக முக்கியமானது; அதனைத் தொடர்ந்து மேம்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
அமானா சஹாம் நேஷனல் பெர்ஹாட் (ஏஎஸ்என்பி) கூச்சிங் கிளையில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 22) நடைபெற்ற ‘ஜு கித்தா மெலாபூர், அனாக் சரவாக்’ திட்டத் தொடக்க நிகழ்ச்சியில் திரு ஃபாடில்லா பேசினார்.
இதனிடையே, நிதியியல் விழிப்புணர்வு கொண்ட தலைமுறையை உருவாக்க, இளம் வயதிலிருந்தே நிதியியல் கல்வியை விதைக்க வேண்டும் என்று ஏஎஸ்என்பி தலைமை நிர்வாக அதிகாரி ஃபட்ஸிஹான் அப்பாஸ் முகமது ராம்லி தெரிவித்தார்.
பணத்தின் மதிப்பு, சேமிப்பின் முக்கியத்துவம், அடிப்படை முதலீட்டுக் கோட்பாடுகள் ஆகியவற்றை இளமையிலேயே புரிந்துகொள்வது, இளையர்கள் வளரும்போது சிறந்த நிதி முடிவுகளை எடுக்க உதவும் என்றார் அவர்.
முன்னதாக நடத்தப்பட்ட நிதியியல் கல்வித் திட்டங்களுக்குச் சரவாக் மக்கள் அளித்த வரவேற்பு, கற்கவும் சேமிக்கவும் முதலீடு செய்யவும் அவர்களுக்குள்ள உண்மையான ஆர்வத்தைக் காட்டுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
ஏற்கெனவே உருவான உறவு, நம்பிக்கையின் அடிப்படையில், சரவாக் மக்களுக்கெனத் தனிப்பட்ட ‘ஜு, மெலாபூர் மெனாங் மாஸ்’ பிரசாரத்தை ஏஎஸ்என்பி அறிமுகப்படுத்தியுள்ளதாகத் திரு ஃபட்ஸிஹான் கூறினார்.
நவம்பர் 1 முதல் டிசம்பர் 31 வரை நடைபெறும் இப்பிரசாரத்தில், தகுதிபெறும் சரவாக் பங்குதாரர்கள் பங்கேற்கலாம். பிரசாரக் காலம் வரை பராமரிக்கப்படும் ஒவ்வொரு 5,000 ரிங்கிட் நிகர முதலீடும், விதிமுறைகளுக்கு உட்பட்டு, அதிர்ஷ்டக் குலுக்கலில் தானாகவே ஒரு முறை பங்கேற்கத் தகுதிபெறும்.
