பிலிப்பீன்சைப் புரட்டியெடுத்த சூறாவளி; 90க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

2 mins read
9cf89210-7a69-4d2e-8072-d0138b17b220
பிலிப்பீன்சின் சிபு மாவட்டத்தில் ‘தலிசே’ நகரில் சேதத்தைப் பார்வையிடும் மக்கள். - படம்: ராய்ட்டர்ஸ்

சிபு, பிலிப்பீன்ஸ்: பிலிப்பீன்சில் சிபு நகரைத் தாக்கிய ‘கல்மய்கி’ சூறாவளியால் 90க்கும் மேற்பட்டோர் மாண்டுள்ளனர். புதன்கிழமை (நவம்பர் 5) தென்சீனக் கடலை நோக்கி நகர்ந்துள்ள புயல், தற்போது பலாவான் நகரைச் சூழ்ந்துள்ளது.

பல வீடுகள் அழிந்துள்ள நிலையில், சூறாவளியால் பெரும் சேதத்தைச் சுற்றுலாத் தலமான சிபு எதிர்நோக்கியுள்ளது. பல இடங்களில் வெள்ளப் பெருக்கின் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மின்டானோ தீவுப்பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்ததால் மாண்டோர்களில் ஆறு ராணுவ வீரர்களும் அடங்குவர். மின்டானோவின் வடக்கு மற்றும் விசயாஸ் பகுதிகளில் இருந்து 200,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

வெள்ளம் வடிந்ததைத் தொடர்ந்து பலத்த சேதம் காணப்பட்டது. 13 பேரைக் காணவில்லை என்று பேரிடர் முகவை தெரிவித்துள்ளது. சிபு நகரில் கடந்த மாதம் பலரும் பலியாகி இருப்பிடங்களையும் இழக்கவைத்த நிலநடுக்கத்துக்குப் பிறகு, தற்போது சூறாவளியும் வெள்ளமும் தாக்கியது அங்குள்ளோரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

உள்ளூர்வாசிகளால் ‘டினோ’ என்று அழைக்கப்படும் கல்மய்கி சூறாவளி, சிபு மாவட்டத்தில் மன்டாவே நகரில் இருந்த ஒரு கொள்கலன் கப்பலை அடித்துச் சென்றுவிட்டது. பிலிப்பீன்ஸ் அரசாங்க வானியல் அமைப்பான ‘பகாசா’, செவ்வாய்க்கிழமைக்குப் பிறகு தென்சீனக் கடலை நோக்கி வலுவிழந்து சென்ற கல்மய்கி, மீண்டும் சீற்றமடையும் என்று தெரிவித்துள்ளது.

மணிக்கு 25 கிலோமீட்டர் முதல் 165 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் காற்றுடன் நகரும் கல்மய்கி சூறாவளி, இவ்வாண்டு பிலிப்பீன்சைத் தாக்கியுள்ள 20ஆவது புயலாகும். அந்தச் சூறாவளி, நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை (நவம்பர் 7) வியட்னாமைத் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வியட்னாமில் சூறாவளியை எதிர்கொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

குறிப்புச் சொற்கள்