67 ஆண்டுகாலச் சேவை: 90 வயது அமெரிக்க ஆசிரியை கின்னஸ் சாதனை

67 ஆண்டுகாலச் சேவை: 90 வயது அமெரிக்க ஆசிரியை கின்னஸ் சாதனை

1 mins read
9118eff5-f55e-457f-89af-46753438fbaf
 உலகின் ஆக நீண்ட காலம் பணியாற்றிய பெண் மொழி ஆசிரியை எனும் சாதனையைப் புரிந்துள்ள 90 வயது பெவர்லி ஹேன்னட்-பிரைஸ். - படம்: டெட்ராய்ட் கன்ட்ரி டே பள்ளி/ஃபேஸ்புக்

மிச்சிகன்: அமெரிக்காவைச் சேர்ந்த திருவாட்டி பெவர்லி ஹேன்னட்-பிரைஸ், மறைந்த புகழ்பெற்ற நடிகர் ராபின் வில்லியம்ஸ், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகி ஸ்டீவ் பால்மர் ஆகியோருக்குக் கல்வி கற்பித்தவர்.

தற்போது 90 வயதாகும் அவர், உலகின் ஆக நீண்ட காலம் பணியாற்றிய மொழி ஆசிரியை என்ற கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளார்.

பிப்ரவரி 2ஆம் தேதி, மிச்சிகனின் ஓக்லாண்ட் பகுதியில் உள்ள டெட்ராய்ட் கன்ட்ரி டே பள்ளியில் (Detroit Country Day School) நடைபெற்ற கூட்டத்தில் இந்தச் சாதனைக்கான சான்றிதழ் அவருக்கு வழங்கப்பட்டது.

அவரது 67 ஆண்டுகால ஆசிரியர் பணியைப் பாராட்டி இந்த அங்கீகாரம் அளிக்கப்பட்டது.

இது தொடர்பில் கின்னஸ் அமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில், மாணவர்களுக்காகவும் பள்ளிச் சமூகத்திற்காகவும் ஆசிரியர் பணிக்காகவும் தமது வாழ்நாளைத் திருவாட்டி பெவர்லி அர்ப்பணித்துள்ளார் எனக் குறிப்பிட்டது.

மேலும், அவருடைய சீரிய பணியைக் கௌரவிக்கும் விதமாக இந்த கின்னஸ் சாதனை சான்றிதழ் அவருக்கு வழங்கப்பட்டதாக அது தெரிவித்தது.

1958ஆம் ஆண்டு முதல் மாணவர்களுக்குக் கல்வி கற்பித்து வரும் அந்த ஆசிரியை, தான் ஒருபோதும் இந்தப் பணியை விட்டு விலகுவது பற்றி யோசித்ததே இல்லை என்று கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்