தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிலிப்பீன்ஸ் அருகே நிலடுக்கம்; சிலர் உயிரிழப்பு

2 mins read
84990453-ce03-43f4-8c17-438ac6cb8354
மிண்டானாவில் நிலநடுக்கத்தால் கடைத்தொகுதி ஒன்றில் ஏற்பட்ட சேதம். - படம்: ஏஎஃப்பி

மணிலா: தென் பிலிப்பீன்சுக்கு அருகே உள்ள பகுதியை 7.4 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம் உலுக்கியுள்ளது.

வெள்ளிக்கிழமை (அக்டோபர் 10) நிலநடுக்கம் உலுக்கியதாக அந்நாட்டின் பூமித்துறை அமைப்பு தெரிவித்தது.

இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அருகில் உள்ள கடற்கரைப் பகுதிகளில் இருந்தோர் உயர்மட்ட நிலப் பகுதிகளுக்கு இடம் மாறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

மிண்டானாவ் வட்டாரத்தில் உள்ள டவாவ் ஒரியென்டல் பகுதியில் இருக்கும் மனாய் நகருக்கு அருகே நிலநடுக்கம் உலுக்கியது. நில அதிர்வுகள் ஏற்படக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலநடுக்கத்தில் குறைந்தது அறுவர் கொல்லப்பட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

பிலிப்பீன்சை சுனாமி தாக்கக்கூடும் அபாயம் நீங்கியதாக உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணியளவில் பசிபிக் சுனாமி எச்சரிக்கை நிலையம் (பிடிடபிள்யுசி) குறிப்பிட்டது. எனினும், இதர அமைப்புகள் விடுத்த எச்சரிக்கைகள் தொடர்ந்து நடப்பில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட வட்டாரத்தில் மேலும் உயிரிழப்பு இருந்ததாக அங்குள்ள பேரிடர் அமைப்புகளிடமிருந்து தகவல் ஏதும் இல்லை. நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டடங்கள், பாலங்கள் ஆகியவை சேதமடைந்ததாக முதலில் தகவல் வந்ததாக மனாயில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த நிலநடுக்கம், அண்மைய ஆண்டுகளில் பிலிப்பீன்சை உலுக்கியிருக்கும் ஆக மோசமான நிலநடுக்கங்களில் ஒன்று. ‘ரிங் ஆஃப் ஃபியர்’ எனப்படும் நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் சாத்தியம் உள்ள உலக வட்டாரத்தில் பிலிப்பீன்ஸ் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் அந்நாட்டை 800க்கும் அதிகமான நிலநடுக்கங்கள் உலுக்குவதுண்டு.

இந்தோனீசியாவின் வடக்குப் பகுதிகள், சுலாவெசி பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்தோனீசியாவின் சில கடற்கரைப் பகுதிகள், பலாவ் தேசம் ஆகியவை ஒரு மீட்டர் அளவிலான உயரம் வரை எழக்கூடிய அலைகளை எதிர்நோக்கலாம் என்று முன்னதாக எச்சரிக்கப்பட்டது.

டவாவில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட நிகழ்வுகள் காணொளிகளில் பதிவுசெய்யப்பட்டன. அந்தக் காணொளிகள் சமூக ஊடகத் தளங்களில் பலரால் பகிரப்பட்டன.

குறிப்புச் சொற்கள்