மாவ்மெரெ (இந்தோனீசியா): இந்தோனீசியாவின் கிழக்குப் பகுதிக்கு அருகே சனிக்கிழமை (ஆகஸ்ட் 15) ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது 38 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்புக்காக வீடுகளிலிருந்து வெளியேறினர்.
“38 பேர் கொல்லப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இருவர் மோசமாகக் காயமடைந்தனர், 11 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. கிட்டத்தட்ட 2,000 பேர் தாங்களே வீடுகளிலிருந்து வெளியேறினர்,” என்று இந்தோனீசிய தேசிய பேரிடர் தடுப்பு அமைப்பின் தலைவர் சுஹார்யாந்தோ செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். நிலநடுக்கத்தில் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது.
குறைந்தது இருவர் உயிருடன் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாக மீட்புப் பணியாளர் ஃபாத்துர் ரகுமான், ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
பல இடங்களில் ஒரு மீட்டருக்கும் குறைவான உயரத்துக்கு சுனாமி அலைகள் எழுந்ததாக முன்னர் தெரிவிக்கப்பட்டது. நிலநடுக்கம் உலுக்கி கிட்டத்தட்ட மூன்று மணிநேரத்துக்குப் பிறகு சுனாமி எச்சரிக்கை அகற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சனிக்கிழமை காலை நிலநடுக்கம் உலுக்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிலைய (யுஎஸ்ஜிஎஸ்) அதிகாரிகளும் இந்தோனீசிய அதிகாரிகளும் முன்னதாகத் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
நிலநடுக்கம் தொடங்கிய பகுதி
நிலநடுக்கம், ஃபுளோரஸ் தீவின் வடமேற்குப் பகுதியிலிருந்து கிட்டத்தட்ட 68 கிலோமீட்டர் தொலைவில் தொடங்கியதாக ‘யுஎஸ்ஜிஸ்’ குறிப்பிட்டது.
முதல் நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி அதிகாலை 4.58 மணிக்கு 15 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக முன்னதாகத் தெரிவிக்கப்பட்டது. நிலநடுக்கத்துக்குப் பிறகு பல நில அதிர்வுகளும் உலுக்கின. ரிக்டர் அளவில் 6.1 எனப் பதிவான நில அதிர்வும் அவற்றில் அடங்கும்.
பாதிக்கப்பட்ட பகுதிகள்
கிழக்கு நுசா தெங்காரா, மேற்கு நுசா தெங்காரா, தெற்கு சுலாவெசியின் சில பகுதிகளில் வலுவான நில அதிர்வுகள் உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. பல இடங்களில் அதிர்வுகள் ஒரு நிமிடத்துக்கும் மேல் நீடித்ததாகக் குடியிருப்பாளர்கள் பலர் கூறியதாகவும் குறிப்பிடப்பட்டது.
இதற்கிடையே, கடலடியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் ஆஸ்திரேலியாவுக்கு சுனாமி எழும் அபாயம் இருக்காது என்று அந்நாட்டின் சுனாமி எச்சரிக்கை நிலையம் தெரிவித்தது.
நிலத்தடிச் செயல்பாடுகளால் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படக்கூடிய ‘பசிபிக் ரிங் ஆஃப் ஃபையர்’ எனும் வட்டாரத்தில் இந்தோனீசியா அமைந்துள்ளது.


