தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சட்டவிரோத வாடகை கார் சேவை: 70 விழுக்காட்டினர் தற்காலிக நிறுத்தம்

2 mins read
22ad727e-905f-4671-9b97-40d225e325bf
சாங்கி விமான நிலையத்தில் சட்டவிரோத வாடகை கார் சேவையை மேற்கொண்ட மலேசிய ஓட்டுநர் காருடன் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். - படம்: நிலப் போக்குவரத்து ஆணையம்

ஜோகூர் பாரு: மலேசியாவில் உள்ள எல்லை தாண்டிய வாடகை கார் ஓட்டுநர்களில் சுமார் 70 விழுக்காட்டினர் தேசிய தின வார இறுதிக்கு முன்னதாக தங்கள் சேவைகளை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதேவேளையில், சில ஓட்டுநர்கள் தேசிய தினத்திற்குப் பின் வரும் வாரத்திற்கான முன்பதிவுகளை ரத்து செய்துள்ளனர்.

சிங்கப்பூரிலிருந்து மலேசியாவிற்கும், மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கும் சட்டவிரோத வாடகை கார் சேவைகளைக் கட்டுப்படுத்த சிங்கப்பூரின் நிலப் போக்குவரத்து ஆணையம் (எல்டிஏ), அமலாக்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியதைத் தொடர்ந்து, இது நிகழ்ந்துள்ளதாக மலேசிய ஊடகமான சைனா பிரஸ் தெரிவித்துள்ளது.

இத்தகைய அமலாக்க நடவடிக்கைகளால், பல மலேசிய எல்லை தாண்டிய வாடகை கார் ஓட்டுநர்கள், தங்கள் பயணிகளிடம் முன்பதிவுகள் ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர் என்றும் சைனா பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சென் (உண்மைப் பெயரல்ல) என்ற ஓட்டுநர் கூறுகையில், “இவ்வளவு கடுமையான தண்டனைகளுக்கிடையே, ஓட்டுநர்கள் பலர் ஆபத்தில் சிக்கிக்கொள்ள விரும்புவதில்லை,” என்றார்.

சிங்கப்பூரில் சட்டவிரோத வாடகை கார் சேவைகளை மேற்கொள்வதாக சந்தேகிக்கப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.

இதன் விளைவாக ஆகஸ்ட் 8 முதல் 10ஆம் தேதி வரை 70 விழுக்காடு வாடகை கார் ஓட்டுநர்கள் தங்கள் சேவைகளை நிறுத்தியுள்ளனர்.

“முன்னதாக, சிங்கப்பூர் தேசிய தின பொது விடுமுறைக்கு நிறைய முன்பதிவுகள் வந்தன. ஆனால் இந்த அண்மைய அமலாக்க நடவடிக்கை இதுவரை நடந்தவற்றிலேயே மிகவும் கடுமையானது. இப்போது பல ஓட்டுநர்கள் ஆபத்தைச் சந்திக்க துணிவதில்லை,” என்று சென் கூறினார்.

சட்டவிரோத வாடகை கார் சேவைகளைப் பயன்படுத்துவது பயணிகளை அபாயத்தில் ஆழ்த்துகிறது என்று எல்டிஏ எச்சரித்துள்ளது.

மேலும் அமலாக்க நடவடிக்கைகளின்போது வாடகை கார் ஓட்டுநர் பிடிபட்டால், அது வாடகை சேவை எடுத்துள்ள பயணிகளின் பயணத்தைத் தடுக்கக்கூடும் என்று எல்டிஏ கூறியது.

சட்டவிரோத வாடகை கார் சேவைகளை வழங்குவதில் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்டவர்களுக்கு S$3,000 வரை அபராதம் மற்றும்/அல்லது ஆறு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். அவர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படலாம்.

குறிப்புச் சொற்கள்