ஆம்ஸ்டர்டாம்: உலக அளவில் கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 7,000 இயந்திர மனிதர்கள் விற்பனையானதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன.
நிறுவனங்களிலும் நிபுணத்துவச் சேவைகளிலும் அவை பயன்படுத்தப்பட்டதாக அனைத்துலக ரோபோட்டிக்ஸ் சம்மேளனம் குறிப்பிட்டது.
இருப்பினும், உலக அளவில் விற்பனையான இயந்திர மனிதர்களின் எண்ணிக்கை எதிர்வரும் ஆண்டுகளில் ரோபோட்டிக்ஸ் துறையில் கணிக்கப்பட்ட பெரும் வளர்ச்சியுடன் முரண்பட்டுள்ளது.
குறிப்பாக, உலகின் மிகப்பெரிய தொழிற்துறை சார்ந்த இயந்திர மனிதர்களின் சந்தையைக் கொண்டுள்ள சீனாவில் பெரும் வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் தொடர்பில் இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கண்காட்சி ஒன்றில் இயந்திர மனிதர்கள் ஓடுவதையும் குத்துச்சண்டையில் ஈடுபடுவதையும் சீனா காட்சிப்படுத்தியது.
அனைத்துலக ரோபோட்டிக்ஸ் சம்மேளனத்தின் தரநிலைகள்படி, மனிதனைப் போன்ற தோற்றத்தைக் கொண்டு மனிதர்களுக்காக வடிவமைக்கப்பட்ட சூழலில் தன்னிச்சையாகச் செயல்படக்கூடிய கருவிகள், இயந்திர மனிதர்களாக அங்கீகரிக்கப்படுகின்றன.
அத்தகைய இயந்திர மனிதர்களுக்குக் கால்கள் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை.
2024ஆம் ஆண்டு கிட்டத்தட்ட 542,000 வழக்கமான தொழிற்துறை இயந்திர மனிதர்கள் நிறுவப்பட்டன. அதே ஆண்டில் போக்குவரத்து, உபசரிப்பு, துப்புரவு போன்றவற்றுக்காக 199,000 சேவை இயந்திர மனிதர்கள் விற்பனையாகின.
