ஜோகூர் பாரு தைப்பூசத் திருவிழாவில் 70,000 பேர் கலந்துகொள்வர் என எதிர்பார்ப்பு

2 mins read
e17ce9a1-c14e-4cb8-9242-95ac45562377
தைப்பூசத் திருவிழாவுக்காகத் தயாராகும் பணிகள் பத்து நாள்களுக்கு முன்பு தொடங்கியதாக ஜோகூர் பாருவில் உள்ள அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலின் தலைவர் என். சண்முகம் தெரிவித்தார். - படம்: மலேசிய ஊடகம்

ஜோகூர் பாரு: தைப்பூசத் திருவிழாவுக்காக மலேசியாவின் ஜோகூர் பாரு நகரில் உள்ள அருள்மிகு தெண்டாயுதபாணி கோயில் தயாராகி வருகிறது.

செவ்வாய்க்கிழமையன்று (பிப்ரவரி 11) தைப்பூசத் திருவிழா அனுசரிக்கப்படுகிறது.

அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலில் நடைபெறும் தைப்பூசத் திருவிழாவில் ஏறத்தாழ 70,000 பேர் கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தைப்பூசத் திருவிழாவுக்காகத் தயாராகும் பணிகள் பத்து நாள்களுக்கு முன்பு தொடங்கியதாகக் கோயில் தலைவர் என். சண்முகம் பகிர்ந்துகொண்டார்.

ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் நடத்தப்பட்ட சிறப்பு வழிபாடுகளில் 100லிருந்து 300 பக்தர்கள் கலந்துகொண்டதாக அவர் கூறினார்.

விரைவு ரயில் சேவை இணைப்பு பணிமனைக்கான கட்டுமானத் தளத்துக்கு அருகில் இக்கோயில் அமைந்துள்ளது.

கட்டுமானப் பணிகளால் அதிக இடையூறு ஏற்படாதிருக்க ஒப்பந்ததாரர்களுடன் கோயில் நிர்வாகம் ஒன்றிணைந்து செயல்படுகிறது.

“தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு விரைவு ரயில் சேவைத் திட்டத்துக்கான கட்டுமானப் பணிகள் பிப்ரவரி 10, பிப்ரவரி 11 என இரண்டு நாள்களுக்கு நிறுத்திவைக்கப்படும். தைப்பூசத் திருவிழா சுமுகமான முறையில் நடந்தேற காவல்துறை, அரசு சார்பற்ற பல்வேறு அமைப்புகள் ஆகியவற்றுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம்,” என்று திரு சண்முகம் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

திங்கட்கிழமை (பிப்ரவரி 10) இரவு 10 மணி அளவில் ஜோகூர் பாருவில் உள்ள ஜாலான் உங்கு புவானில் இருக்கும் அருள்மிகு ராஜமாரியம்மன் தேவஸ்தானத்திலிருந்து கிட்டத்தட்ட 5,000 பக்தர்கள் காவடி ஏந்தி அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலை நோக்கி தங்கள் பயணத்தைத் தொடங்குவர் என்று அவர் கூறினார்.

அருள்மிகு ராஜமாரியம்மன் தேவஸ்தானத்துக்கும் வாடி ஹனா வட்டாரத்தில் உள்ள அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலுக்கும் இடையிலான ஆறு கிலோமீட்டர் பயணப் பாதையில் பக்தர்கள் காவடிகளை ஏந்திச் செல்வர்.

பயணப்பாதை எங்கும் பக்தர்கள் இளைப்பாறுவதற்கான இடங்களுக்கும் இருள் சூழ்ந்த இடங்களில் கூடுதல் விளக்குகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் திரு சண்முகம் தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 11) இரவு 7 மணிக்கு அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலுக்கும் தாமான் உங்கு புவானுக்கும் இடையிலுள்ள வீதிகளில் தேர் வலம்வரும் என்று தெரிவிக்கப்பட்டது.

தைப்பூசத்தை முன்னிட்டு கிட்டத்தட்ட 5,000 ஊழியர்கள் மற்றும் தொண்டூழியர்களின் உதவியுடன் ஏறத்தாழ 50,000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க அருள்மிகு தெண்டாயுதபாணி கோயில் தயாராகி வருகிறது.

மலேசியக் காவல்துறையும் அரசு சார்பற்ற அமைப்புகளும் உணவுப்பொருள்களை நன்கொடையாக வழங்கியிருப்பதாகத் திரு சண்முகம் கூறினார்.

குறிப்புச் சொற்கள்