வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் ஆட்குறைப்புத் திட்டத்தை ஏற்றுக்கொண்டு, சலுகைகளைப் பெற ஏறக்குறைய 75,000 அரசாங்க ஊழியர்கள் உடன்பட்டுள்ளதாக அமெரிக்கப் பணியாளர் நிர்வாக அலுவலகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அரசாங்கத் துறைகளில் மொத்தம் 2.3 மில்லியன் ஊழியர்கள் உள்ளனர். அவர்களில் பலர் செயல்திறனற்றவர்கள் என்றும் தனக்கு எதிராகச் செயல்படுகின்றனர் என்றும் கூறி, ஆட்குறைப்பு செய்யப்போவதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அவ்வகையில், ஆட்குறைப்பிற்கு ஆயத்தமாகும்படி அரசாங்க அமைப்புகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். பல அமைப்புகள் அண்மையில் வேலைக்கு எடுத்தவர்களைப் பணிநீக்கம் செய்யும் நடவடிக்கைகளையும் தொடங்கிவிட்டன.
சில அமைப்புகளில் 70% வரை ஆட்குறைப்பு இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், டிரம்ப் தான் சொன்னபடி சலுகைகளை வழங்குவார் என்பதற்கு உத்தரவாதமில்லை என்பதால் ஆட்குறைப்புத் திட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்று பல தொழிற்சங்கங்கள் தன் உறுப்பினர்களை வலியுறுத்தியுள்ளன.
டிரம்ப் அறிவித்துள்ள திட்டத்தின்படி, ஆட்குறைப்பு செய்யப்படும் ஊழியர்களுக்கு இவ்வாண்டு அக்டோபர் மாதம்வரை வேலை செய்யாமலேயே சம்பளமும் இதர சலுகைகளும் வழங்கப்படும்.
ஆனால், செலவு தொடர்பான சட்ட விதிகள் வரும் மார்ச் 14ஆம் தேதியுடன் முடிவடைவதால், ஆட்குறைப்பிற்கு ஆளாகும் ஊழியர்களுக்கு அதன்பிறகு சம்பளம் வழங்கப்படுவதற்கு உத்தரவாதமில்லை என்று தொழிற்சங்கங்கள் கூறுகின்றன.
டிரம்ப் புதிதாக ஏற்படுத்தியுள்ள அரசாங்கச் செயல்திறன் பிரிவிற்குப் பெருஞ்செல்வந்தர் இலோன் மஸ்க் தலைமை தாங்குகிறார். அமெரிக்க அரசின் வரவுசெலவுத் திட்டத்தில் $1 டிரில்லியனைக் குறைக்க அது முயன்று வருகிறது. கடந்த ஆண்டு $6.75 டிரில்லியன் மதிப்பிலான வரவுசெலவுத் திட்டத்தை அமெரிக்கா தாக்கல் செய்தது.
தொடர்புடைய செய்திகள்
அதில் ஐந்து விழுக்காட்டிற்கும் குறைவான தொகையே அரசாங்க ஊழியர்களின் ஒட்டுமொத்த சம்பளம் என்பது குறிப்பிடத்தக்கது.