லண்டன்: அனைத்துலக வங்கியான ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் ஏறத்தாழ 7,800 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது.
பிரிட்டனைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் இவ்வங்கி, 2030ஆம் ஆண்டிற்குள் வங்கியின் நிர்வாகம், தொழில்நுட்பப் பிரிவுகளில் பணியாற்றும் 15 விழுக்காட்டுக்கும் அதிகமானோரைப் பணிநீக்கம் செய்யவுள்ளது.
எனினும், பாதிக்கப்பட்டோரில் சிலருக்கு வங்கியின் பிற பிரிவுகளில் வேலை வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.
இந்தியா, சீனா, மலேசியா, போலந்து ஆகிய நாடுகளில் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி பெரிய அளவில் நிர்வாகச் செயல்பாடுகளைக் கொண்டுள்ளது.
எனினும், எந்தெந்த நாடுகளில் ஆட்குறைப்பு நடப்புக்கு வரும் என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.
“வங்கியின் லாபத்தை அதிகரிக்கவும், வாடிக்கையாளர் சேவை, உள்நாட்டுத் திறனை மேம்படுத்தவும் தானியக்கம், மேம்பட்ட பகுப்பாய்வு, ஏஐ தொழில்நுட்பங்களை அதிகளவில் பயன்படுத்தி வருகிறோம்,” என்று வங்கியின் தலைமை நிர்வாகி பில் வின்டர்ஸ் தெரிவித்துள்ளார்.
அண்மை காலமாக வேலைகளை ஏஐ தொழில்நுட்பம் மாற்றி அமைத்து வருவதால், உலகெங்கிலும் உள்ள முன்னணி நிறுவனங்கள் ஆட்குறைப்பில் ஈடுபட்டு வருகின்றன.
பிப்ரவரியில் சிங்கப்பூரின் மிகப்பெரிய வங்கியான டிபிஎஸ் 4,000 தற்காலிகப் பணியிடங்களைக் குறைப்பதாக அறிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
தொழில்நுட்பத் துறையில் அமேசான் 30,000 ஊழியர்களையும், ஆரக்கிள் 10,000 ஊழியர்களையும் நீக்கியுள்ளன. மெட்டா நிறுவனம் 10 விழுக்காடு ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

