மற்ற ஊழியர்களுக்கு இணையாக உள்ள மாற்றுத்திறனாளிகளின் பணித்திறன்

மற்ற ஊழியர்களுக்கு இணையாக உள்ள மாற்றுத்திறனாளிகளின் பணித்திறன்

2 mins read
93303cba-63a2-4856-8b76-5de328ac3dd6
மாற்றுத்திறனாளிகளின் பணித்திறன் பற்றிய கணக்கெடுப்பில் 1,830 முதலாளிகள் பங்கேற்றனர். - படம்: பெர்னாமா

புத்ராஜெயா: மலேசியாவில் மாற்றுத்திறனாளிகள் குறித்த மலேசியப் புள்ளிவிவரத் துறையின் 2025 வேலைவாய்ப்புக் கணக்கெடுப்பின்படி, மாற்றுத்திறனாளிகளின் பணி நெறிமுறைகள் தொடர்ந்து அங்கீகாரம் பெற்று வருகின்றன. அதன்படி கிட்டத்தட்ட 81 விழுக்காட்டு முதலாளிகள் அவர்களின் செயல்திறனை மற்ற ஊழியர்களுக்கு இணையாக மதிப்பிட்டுள்ளனர்.

1,830 முதலாளிகளை உள்ளடக்கிய இந்தக் கணக்கெடுப்பில், பணியிடத்தில் உற்பத்தித்திறனையும் புத்தாக்கத்தையும் மேம்படுத்துவதில் மாற்றுத்திறனாளிப் பணியாளர்களின் பங்கை 71.9 விழுக்காட்டினர் அங்கீகரித்துள்ளதாகவும், கிட்டத்தட்ட 22 விழுக்காட்டு முதலாளிகள் தற்போது தங்களுடன் பணிபுரிய மாற்றுத்திறனாளிகளைப் பணியமர்த்துவதாகவும் கண்டறியப்பட்டுள்ளதாக தலைமைப் புள்ளியியலாளர் டாக்டர் முகமது உசிர் மஹிதின் கூறினார்.

“இந்த முயற்சி, பணியாளர் பன்முகத்தன்மை குறித்த முதலாளிகளின் வளர்ந்து வரும் விழிப்புணர்வைப் பிரதிபலிப்பது. அத்துடன், உடல் குறையுள்ள ஊழியர்களிடையே கிட்டத்தட்ட 30 விழுக்காடு வேலைவாய்ப்பு எட்டப்பட்டிருப்பதாலும் ஆதரிக்கப்படுகிறது,” என்று அவர் வியாழக்கிழமை (மே 28) வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

முன்னர் மாற்றுத்திறனாளிகளைப் பணியமர்த்திய முதலாளிகளில் கிட்டத்தட்ட 91 விழுக்காட்டினர், ஒன்று முதல் ஐந்து வேலை வாய்ப்புகளை வழங்கியதாகவும், அதே நேரத்தில் 47.5 விழுக்காட்டினர் எதிர்காலத்திலும் அவர்களைப் பணியமர்த்த விரும்புவதாகவும் அவர் கூறினார்.

“தற்போது மாற்றுத்திறனாளிகளைப் பணியமர்த்தும் முதலாளிகளில், 83.7 விழுக்காட்டினர் ஒன்று முதல் ஐந்து ஊழியர்களைப் பணியமர்த்துகின்றனர். மேலும் 31.4 விழுக்காட்டுடன் அடிப்படைத் தொழில்களே விரும்பப்படும் வேலைப் பிரிவாகத் தொடர்கிறது,” என்று அவர் கூறினார்.

பணியமர்த்தப்பட்ட மாற்றுத்திறனாளி ஊழியர்களில் 86.5 விழுக்காட்டினர், தங்கள் இயலாமைக்கான அதிகாரபூர்வச் சான்றாக மாற்றுத்திறனாளி அட்டையை வைத்திருப்பதாக இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது என்றும் முகமது உசிர் கூறினார்.

அனைவரையும் உள்ளடக்கிய வேலைவாய்ப்புச் சூழலை வலுப்படுத்தும் முயற்சிகளுக்குப் பெரும்பாலான முதலாளிகள் ஆதரவு தெரிவித்ததாக அவர் கூறினார். மாற்றுத்திறனாளிகளின் வேலைவாய்ப்பு தொடர்பான குறிப்பிட்ட வழிகாட்டி நெறிமுறைகளை 90.6 விழுக்காட்டினர் ஆதரித்த நிலையில், உடற்குறைபாட்டின் வகைக்கு ஏற்ப வேலைப் பயிற்சி வடிவமைக்கப்பட வேண்டும் என்பதை 77.3 விழுக்காட்டினர் ஏற்றுக்கொண்டனர்.

பணியிடங்களை மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ப மாற்றுவதற்கான நன்மைகள், சலுகைகள் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் முதலாளிகள் வலியுறுத்தினர்.

குறிப்புச் சொற்கள்
மாற்றுத்திறனாளிபணியாளர்பன்முகத்தன்மை