கோலாலம்பூர்: பண்டிகைக் காலத்தில் சாலைப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் உயிரிழப்பை ஏற்படுத்தும் விபத்துகளின் விகிதத்தைக் குறைப்பதற்கும் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 15) அதிகாலை கோலாலம்பூரைச் சுற்றி நடத்தப்பட்ட ‘ஆப்ஸ் செலாமட் 25’ சோதனை நடவடிக்கையின் வழி பல்வேறு போக்குவரத்துக் குற்றங்களுக்காக மொத்தம் 820 அழைப்பாணைகள் வழங்கப்பட்டன.
சனிக்கிழமை இரவு 10 மணிக்குத் தொடங்கிய இச்சோதனை நடவடிக்கையில், பல்வேறு குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் பயன்பாடு ஆகிய குற்றங்களுக்காக 18 முதல் 41 வயதுடைய எழுவர் கைது செய்யப்பட்டதாக கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறை இயக்குநர் காவல்துறை உதவி ஆணையர் முஹமது சம்சுரி முஹமது இசா தெரிவித்தார்.
தொடக்கக்கட்ட சிறுநீர் பரிசோதனையில், கைது செய்யப்பட்டவர்களில் நால்வர் கஞ்சா மற்றும் மெத்தம்ஃபெட்டமின் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது கண்டறியப்பட்டது.
மேலும், அதிகமான இரைச்சலை எழுப்பும் குற்றத்திற்காக 1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச் சட்டப் பிரிவு 60ன் கீழ், 73 மோட்டார் சைக்கிள்களும் 10 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட பெரும்பாலான மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்கள், அதிக இரைச்சலை உருவாக்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டிருந்ததாக முஹமது சம்சுரி கூறினார்.
இச்சோதனை நடவடிக்கையில், கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறையைச் சேர்ந்த 100 அதிகாரிகளும் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர் என்று பெர்னாமா தெரிவித்தது.

