பெட்டாலிங் ஜெயா: 84 வயதில், டாக்டர் பிரசன்னா முகுந்தன் தமது வாழ்நாள் கனவை நனவாக்கியுள்ளார். ஒரு காலத்தில் தமக்கு எட்டாக்கனியாக இருந்த முனைவர் பட்டத்தை அவர் இப்போது பெற்றுள்ளார். 1950களில் மலாக்காவில் உள்ள சேக்ரட் ஹார்ட் கான்வென்ட்டில் தமது பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, இந்தியாவில் மருத்துவம் பயில்வதற்கான வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.
இருப்பினும், அவரது தந்தை அவருக்குத் திருமணம் செய்து வைக்க விரும்பியதால், மருத்துவர் ஆக வேண்டும் என்ற அவரது கனவு தற்காலிகமாகத் தடைபட்டது.
“பொதுக் கல்விச் சான்றிதழ் படிப்பை முடித்த பிறகு, நான் சேக்ரட் ஹார்ட் கான்வென்ட்டில் தற்காலிக ஆசிரியராகப் பணியாற்றினேன். எனக்கு 19 வயது இருந்தபோது, திருமண வரன் ஒன்று வந்தது. நான் தொடர்ந்து படிக்க விரும்புவதாகக் கூறினேன். ஆனால், திருமணத்திற்குப் பிறகும் கல்வியைத் தொடரலாம் என்று என் தந்தை உறுதியளித்தார். நான் மிகுந்த மனவேதனை அடைந்தேன், இருப்பினும் அக்காலகட்டத்தில் வாழ்க்கை முறை அப்படித்தான் இருந்தது,” என்று சிலாங்கூரில் உள்ள பெட்டாலிங் ஜெயாவில் நடைபெற்ற நேர்காணலின் போது அவர் தெரிவித்தார்.
அரை நூற்றாண்டுக்கும் மேலான காலத்திற்குப் பிறகு, இரு பேரக் குழந்தைகளின் பாட்டியான இவர், உயர்கல்வி கற்க வேண்டும் என்ற தமது லட்சியத்தை நிறைவேற்றிக்கொண்டார். அக்டோபர் 24ஆம் தேதியன்று, சிலாங்கூரின் சுபாங் ஜெயாவில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் கல்வித்துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.
“கல்வி கற்பது எனக்கு எப்போதும் ஊக்கமளிப்பதாகவே இருந்து வருகிறது. அது எனக்கு உற்சாகத்தைத் தருகிறது. முனைவர் பட்டம் பெற வேண்டும் என்ற எனது நீண்டகாலக் கனவை இறுதியாக நனவாக்கியதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்,” என்று பிரசன்னா கூறினார்.
ஓய்வு பெறுவதற்கு முன்பு, கோலாலம்பூரில் உள்ள மலேசிய எய்ட்ஸ் மன்றத்தில் சமூக பராமரிப்பு, ஆதரவுப் பிரிவின் மேலாளராக அவர் பணியாற்றியிருந்தார்.
2018ஆம் ஆண்டில், தமது வாழ்நாள் லட்சியத்தை நிறைவேற்றும் நோக்கில், முனைவர் பட்டப் படிப்பில் சேர்ந்தார். இருப்பினும், 2020ல் அவருக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதால், அவரது திட்டங்களுக்குத் தடை ஏற்பட்டது.
“துரதிர்ஷ்டவசமாக, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சூழல் எனது படிப்பை நிறுத்தும் நிலையை ஏற்படுத்தியது. ஆனால், விரிவுரையாளர்கள், மேற்பார்வையாளர்களின் ஊக்கத்தால், 2023ல் மீண்டும் படிப்பைத் தொடங்கி அதை நிறைவு செய்தேன்” என்று அவர் கூறினார்.
பிரசன்னாவின் மூத்த மகளும், தொழிலதிபருமான 61 வயது சங்கீதா மோகன் தாஸ், தமது தாயாரின் சாதனைகளைக் கண்டு பெருமிதம் கொள்கிறார். தமது தாயார் பதின்ம வயதிலிருந்தே கல்வி கற்க வேண்டும் என்ற கனவைக் கைவிடவே இல்லை. வயது என்பது கல்வி கற்பதற்கு ஒரு தடையல்ல என்பதை அம்மா நிரூபித்துக் காட்டியுள்ளார் என்று அவர் கூறுகிறார்.
