மருத்துவ உதவி நிதியால் 84,000 மலேசியர்கள் பலனடைந்தனர்: அமைச்சர்

மருத்துவ உதவி நிதியால் 84,000 மலேசியர்கள் பலனடைந்தனர்: அமைச்சர்

படம்: பெர்னாமா

02 Mar 2026 - 5:18 pm

2 mins read

கோத்தா பாரு: நீண்டநாள் மருத்துவப் பிரச்சினைகள் கொண்ட மலேசியர்களின் நிதி நிலைமை குறித்து அரசாங்கம் கவனம் செலுத்துகிறது என்று சுகாதார அமைச்சர் சுல்கிஃப்லி அகமது சமூக நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு தெரிவித்தார்.

கம்போங் பாவுங் பாயாம் பகுதியில் உள்ள மஸ்ஜித் அல் ஹுஸ்னா பள்ளிவாசலில் திங்கட்கிழமை (மார்ச் 2) உணவுப் பொட்டலங்களை மக்களுக்கு வழங்கிய பிறகு சுகாதார அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசினார்.

கடந்த 2005ஆம் ஆண்டில் அறிமுகமான சுகாதார உதவி நிதி (TBP) வழியாக 84,000 நோயாளிகள் உதவி பெற்றுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார். அந்த நிதியில் 788 மில்லியன் ரிங்கிட் (S$255.5 மில்லியன்) மக்கள் நலனுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.

நோயாளிகள், குறிப்பாக நீண்டநாள் சிகிச்சை தேவைப்படுவோரின் நிதி நிலை குறித்து அரசாங்கம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

மலேசியர் யாரும் நிதிப் பிரச்சினைகாரணமாக சிகிச்சை பெறாமல் போகக்கூடாது என்பதைத் தமது அமைச்சு உறுதிசெய்கிறது என்றும் அதில் சுகாதார நிதி முக்கிய அங்கம் வகிக்கிறது என்றும் அவர் விளக்கினார்.

கடந்த 2025ஆம் ஆண்டில் சுகாதார நிதிக்கான 3,884 விண்ணப்பங்களை அரசாங்கம் ஏற்றுக்கொண்டு ஒப்புதல் வழங்கியது. அதன் மதிப்பு 58.6 மில்லியன் ரிங்கிட் (S$19.01 மில்லியன்) ஆகும்.

இதுதவிர்த்து, ரமலான் மாத உணவுக் கடைகளில் விதிமீறல் பற்றி அவர் கருத்துரைத்தார். இதுவரை 12 புகார்கள் நாடுதழுவிய நிலையில் கிடைத்துள்ளதாகவும் அவற்றில் நான்கு வாட்ஸ்அப் செயலியில் பெறப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இருப்பினும் நச்சுணவு குறித்து எந்தப் புகாரும் பெறப்படவில்லை என்பதை அவர் உறுதிப்படுத்தினார். உணவுக் கடைக்காரர் எவருக்கும் அபராதம் விதிக்கப்படவில்லை என்பதையும் தெரிவித்தார்.

காசநோய் நிலவரம் பற்றிக் கூறுகையில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இதே காலகட்டத்தில் 482 தொற்றுகள் உறுதி செய்யப்பட்டன. தற்போது அது 417ஆகக் குறைந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்