ஃப்னிடெக்: மொரோக்கோவின் எல்லை நகரான ஃப்னிடெக்கிலிருந்து ஸ்பெயினின் சியூட்டா பகுதிக்குள் நுழைய ஒரே இரவில் ஆயிரக்கணக்கானோர் திரண்டதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, 18 பேர் உயிரிழந்தனர். அவர்கள் சியூட்டா பகுதிக்குள் நுழைய முயன்றபோது மாண்டதாகக் காவல்துறை கூறியது.
வியாழக்கிழமை (ஜூலை 30) 2,000 முதல் 3,000 பேர்வரை சியூட்டாவுக்குள் நுழைந்ததாக ஸ்பெயின் அரசுத் தொலைக்காட்சி தெரிவித்தது. எனினும், மொத்தம் எத்தனை பேர் எல்லை கடக்க முயன்றனர் என்பதைக் கணக்கிட முடியாது என்று காவல்துறை கூறியது
நிலைமையைக் கட்டுப்படுத்த ஸ்பெயின் அரசு எல்லைப் பகுதியில் ராணுவத்தையும் காவல்துறையையும் குவித்துள்ளது.
எல்லை கடந்தவர்களில் பெரும்பாலோர் நண்பகலுக்கு முன்னரே சென்றுவிட்டதாக ஃப்னிடெக் நகர்வாசிகள் தெரிவித்தனர். “நான் தாமதமாக வந்துவிட்டேன். எல்லை முற்றிலும் அடைக்கப்பட்டுவிட்டது,” என்று டாஞ்சியரிலிருந்து வந்த பிராஹிம் என்ற 32 வயது ஆடவர் கூறினார்.
எல்லை மூடப்பட்டதால், பலர் கடலோரப் பகுதிகள் வழியாகவும் நீந்தியும் செல்ல முயன்றனர்.
மொராக்கோ அதிகாரிகளும் பாதுகாப்புப் படைகளை அதிகப்படுத்தி, புலம்பெயர்ந்தோரைத் தொடர்ந்து விரட்டியடித்தனர்.
ஆப்பிரிக்காவிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் நுழைவதற்கான நில எல்லையாகச் சியூட்டா திகழ்வதால், அங்குத் தொடர்ந்து இதுபோன்ற ஊடுருவல் முயற்சிகள் நடந்துவருகின்றன

