பெட்டாலிங் ஜெயா: தேசிய முன்னணியிலேயே மலேசிய இந்தியர் காங்கிரஸ் (மஇகா) நீடிக்க வேண்டும் என்று அக்கட்சியின் மத்தியச் செயற்குழுவிலுள்ள 95 விழுக்காட்டினர் விரும்புவதாக அம்னோ கட்சித் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மஇகா மத்தியச் செயற்குழுக் கூட்டம் புதன்கிழமை (மார்ச் 25) நடைபெற்ற நிலையில், நம்பத்தகுத்த வட்டாரத்திலிருந்து இந்தத் தகவல் கிடைத்துள்ளதாக அம்னோ உச்சமன்ற உறுப்பினர் புவாட் ஸர்காஷி கூறியுள்ளார்.
அந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும் என்று மஇகா தலைவர் எஸ்.ஏ.விக்னேஸ்வரனை அவர் வலியுறுத்தி இருக்கிறார்.
“இதுதான் சரியான முடிவு. அதுவே பெரும்பாலான மஇகா அடித்தளத் தலைவர்களின் விருப்பத்தோடு ஒத்துப்போவதாக இருக்கிறது. எப்படியாயினும், தேசிய முன்னணித் தலைமைத்துவம் சென்ற மாதம் நடத்திய ஓய்வுத்தளச் சந்திப்பில் மஇகா பங்கேற்றது, அக்கட்சி எங்கள் கூட்டணியில் தொடரும் என்பதற்கான அறிகுறி,” என்றார் திரு புவாட்.
“கட்சியின் மறுமலர்ச்சிக்கும் தேசிய முன்னணியின் ஒற்றுமைக்கும் பெரும்பான்மையினரின் விருப்பத்திற்கு இணங்க மஇகா தலைவர் செயல்பட வேண்டும். இல்லையேல், மஇகா பிளவுபட்டு, வரலாற்றில் மட்டுமே அதன் பெயர் இருக்கும்,” என்றும் அவர் அறிவுறுத்தி இருக்கிறார்.
இந்திய சமூகத்தின் உணர்வுகள் கருத்தில்கொள்ளப்படும்
முன்னதாக, புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த மஇகா துணைத் தலைவர் எம்.சரவணன், தற்போது தங்களது கட்சி தேசிய முன்னணியிலேயே நீடிப்பதாகத் தெரிவித்தார்.
ஆயினும், எதிர்க்கட்சிக் கூட்டணியான பெரிக்கத்தான் நேஷனலில் இணைவதற்கான சாத்தியத்தையும் அவர் மறுக்கவில்லை.
பெரிக்கத்தான் கூட்டணியில் இணைவது குறித்து முடிவெடுக்குமுன் மலேசிய இந்தியச் சமூகத்தின் உணர்வுகளைக் கருத்தில்கொள்வோம் என்று திரு சரவணன் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“பெரிக்கத்தான் தலைவராகத் திரு முகைதீன் யாசின் இருந்தபோது, அக்கூட்டணியில் இணைவது குறித்துப் பேச்சு எழுந்தது. ஏனெனில், பணிசார்ந்து அவருடன் மஇகாவிற்கு நீண்ட நெடிய உறவு இருக்கிறது.
“ஆயினும், பெரிக்கத்தானின் தலைமைத்துவம் தற்போது ‘பாஸ்’ கட்சியிடம் இருக்கிறது. அதனால், இந்தியச் சமூகத்தின் கருத்தை அறிந்துகொள்வது அவசியம்.
“இந்தியச் சமூகம் ‘பாஸ்’ கட்சியை ஏற்றுக்கொள்ளுமா என்பது தெரியவில்லை. அக்கட்சியின் தலைமைத்துவம்மீது எங்களுக்கு எந்த முரண்பாடும் இல்லை. ஆயினும், இந்தியச் சமூகமும் அப்படி நினைக்கிறதா என்பதை அறிய முற்பட வேண்டும்,” என்று திரு சரவணன் கூறினார்.

