சுவீடன்: சுவீடனின் டலர்னா மாநிலத்தில் 9,567 ஆண்டுகள் பழைமையான மரம் ஒன்றைப் பாதுகாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
‘நார்வே ஸ்புரூஸ்’ எனப்படும் ஊசியிலை மரவகையைச் சேர்ந்த இந்த மரத்தின் பெயர் ‘ஓல்ட் டிக்கோ’.
சுவீடனின் ‘ஃபியூலுஃபியலெட்’ மலையில் உள்ள இந்த வகை மரம் ஐந்து மீட்டர் (16 அடி) உயரம் வரை வளரக்கூடியது.
புவியியல் பேராசிரியர் லீஃப் கல்மனும், அவரது மனைவியும் மரங்களை ஆய்வுசெய்யும் அறிவியலாளருமான லிசா ஓபெரியும் இந்த மரத்தைக் கண்டுபிடித்தனர். மறைந்த தங்கள் செல்லப்பிராணி (நாய்) டிக்கோவின் நினைவாக அதற்கு ‘ஓல்ட் டிக்கோ’ எனப் பெயரிட்டனர்.
ஏறக்குறைய 9,600 ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்த ஆதி மரத்திலிருந்து, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் புதிய தண்டுகள், கிளைகள், வேர்கள் என மீண்டும் மீண்டும் ‘குளோனிங்’ முறையில் உருவாகிக்கொண்டே இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஒரு தண்டு ஏறக்குறைய 600 ஆண்டுகள் உயிர்வாழும் ஆற்றல் கொண்டது என்றும் கடுமையான பனிப்பொழிவில் இதன் தாழ்வான கிளைகள் தரையில் விழுந்தால் அவை பூமியில் வேரூன்றிப் புதிதாக வளரும் என்றும் கூறப்படுகிறது.
இந்த மரத்தின் வேர்களை ‘கார்பன்-14 டேட்டிங்’ முறையைப் பயன்படுத்தி ஆய்வுசெய்த விஞ்ஞானிகள் இதன் வயதைத் தீர்மானித்ததாகக் கூறப்படுகிறது.