சிங்கப்பூரர்மீது அமில வீச்சு: ஹாங்காங் பதின்மவயது ஆடவருக்குச் சிறை

சிங்கப்பூரர்மீது அமில வீச்சு: ஹாங்காங் பதின்மவயது ஆடவருக்குச் சிறை

படம்: ஏஎஃப்பி

02 Nov 2026 - 3:16 pm

2 mins read

சிங்கப்பூர் பெண் ஒருவர்மீது அமிலத்தை வீசிய ஹாங்காங் பதின்மவயது ஆடவருக்கு எட்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக ஹாங்காங் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்தத் தாக்குதலில் அப்பெண்ணுக்கு கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டன. கடந்த ஆண்டு ஜூன் 9ஆம் தேதி ஆன்சன் கியூ என்ற அந்த பதின்மவயது ஆடவர் அச்செயலைப் புரிந்தார்.

அது, பாதிக்கப்பட்ட 36 வயது ஜியாங் வென் என்பவர்மீது வாழ்நாள் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக ஹாங்காங் உயர் நீதிமன்ற நீதிபதி ஆன்ட்ரூ சான் ஹிங்-வாய் அக்டோபர் 29ஆம் தேதி தெரிவித்ததாக ‘சவுத் சைனா மார்னிங் போஸ்ட்’ குறிப்பிட்டது.

வான் சாய் பகுதியில் ஜியாங் காரில் ஏற முயன்றபோது, அப்போது 17 வயதாக இருந்த கியூ அவர்மீது அமிலத்தை வீசினார்.

முகத்திலும் கால்களிலும் கடும் எரிச்சலை உணர்ந்த அப்பெண், வலியால் அலறிக் கீழே விழுந்தார். அதே நேரத்தில், கருப்பு நிற ஆடையையும் முகக்கவசத்தையும் அணிந்திருந்த கியூ, சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியதாக உள்ளூர் ஊடகச் செய்திகள் தெரிவித்தன.

சம்பவம் நடந்த இரண்டு நாள்களுக்குப் பிறகு கியூ காவல் நிலையத்தில் சரணடைந்தார். ஆனால், காவல்துறையினரின் கேள்விகளுக்குப் பதிலளிக்க மறுத்த அவர், அத்தாக்குதல் குறித்து விளக்கமும் அளிக்கவில்லை.

தாக்குதலை நடத்துவதற்குப் பல நாள்களுக்கு முன்பே கியூ அந்த இடத்திற்குச் சென்று நோட்டமிட்டதைக் காவல்துறையினரின் விசாரணை வெளிப்படுத்தியது.

தற்போது 19 வயதாகும் கியூ, கடுமையான உடல் காயத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் அமிலத்தை வீசிய குற்றச்சாட்டை அக்டோபர் 15ஆம் தேதி உயர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

இதற்கிடையே, ஜியாங் அறுவை சிகிச்சையையும் பல தோல் சிகிச்சைகளையும் மேற்கொண்டார். மருத்துவமனையில் இரண்டு மாதங்கள் தங்கி சிகிச்சை பெற்ற பிறகு, தமது சிகிச்சையைத் தொடர்ந்து மேற்கொள்வதற்காக அவர் சிங்கப்பூர் திரும்பினார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்