பேங்காக்: ரயில் தண்டவாளத்தின் குறுக்கே பேருந்தை நிறுத்திய ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கில் உள்ள ராட்சப்பிராரோப் சாலை-ரயில் சந்திப்பில் இச்சம்பவம் நிகழ்ந்தது.
கிருங் தேப் அபிவாட் சென்ட்ரல் முனையத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த குளிர்சாதன வசதியுடைய பேருந்து ஒன்று ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றது. அப்போது, போக்குவரத்துச் சந்திப்பில் பச்சை விளக்கு எரிந்ததால் பேருந்து வழக்கம்போல் சென்றது.
ஆனால், முன்னால் சென்ற வாகனங்கள் திடீரென நின்றதால், அந்தப் பேருந்து தண்டவாளத்தின் குறுக்கே நகர முடியாமல் நின்றது. இச்சம்பவத்தின் காணொளி சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து, பேங்காக் பொதுப் போக்குவரத்து ஆணையம் உடனே விசாரணை நடத்தியது.
சம்பவத்தின்போது பேருந்தில் இருந்த ஆய்வாளர் ஒருவர் உடனடியாக அவசரகால பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார். அவர் தாய்லாந்து அரசு ரயில்வே அதிகாரிகளுடனும் உள்ளூர் தன்னார்வலர்களுடனும் இணைந்து போக்குவரத்தைச் சீராக ஒழுங்குபடுத்தினார். இதனால் பேருந்து எவ்விதப் பாதிப்புமின்றி பாதுகாப்பாகத் தண்டவாளத்திலிருந்து வெளியேறியது.
இச்சம்பவத்திற்காக ஆணையம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டது. ஒழுங்குமுறை விதிகளின்கீழ் ஓட்டுநர் தண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இனிவரும் காலங்களில் ரயில் சந்திப்புகளைக் கடப்பதற்கு முன் போக்குவரத்து நிலவரத்தைக் கவனமாக மதிப்பிட வேண்டும் என்று எல்லா ஓட்டுநர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களின் நம்பிக்கையைத் தக்கவைக்க உச்சகட்ட பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றுமாறும் ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

