ஜோகூர் எல்லையில் தவறு இழைக்கும் மோட்டார் சைக்கிளோட்டிகள் மீது நடவடிக்கை

2 mins read
385336c3-f5fe-4f0c-9d1b-408934c35dd0
ஜோகூர் பாருவின் சிஐகியூ குடிநுழைவு நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள்கள். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஜோகூர் பாரு: மலேசியாவின் ஜோகூர் பாரு எல்லையில் உள்ள நிலவழி சுல்தான் இஸ்கந்தர் குடிநுழைவு, சோதனைச்சாவடி, தனிமைப்படுத்தும் நிலையத்தில் (CIQ - சிஐகியூ) தவறு இழைக்கும் மோட்டார் சைக்கிளோட்டிகள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

சட்டத்தை மீறுவோர், நிலையத்தில் பொருள்களைச் சேதப்படுத்துவோர் ஆகியோருக்கு இது பொருந்தும். இவ்வாண்டு இதுவரை குறைந்தது நான்கு மோட்டார்சைக்கிளோட்டிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக சிஐகியூ தெரிவித்தது.

ஆக அண்மையில் கைது செய்யப்பட்டவர், சில நாள்களுக்கு முன்பு தனது கடப்பிதழை சரியாக சமர்ப்பிக்காமல் மலேசியாவுக்குள் நுழைய முயன்றதாக நம்பப்படும் சமையல்காரராவார். 30 வயதைத் தாண்டிய அந்த ஆடவர், உச்ச நேரத்தில் மூடப்பட்டிருந்த சோதனைச்சாவடியின் தடுப்பைத் தானே அகற்றி நாட்டுக்குள் நுழைந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது என்று மலேசிய உள்துறை விவகார அமைச்சு அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

“இதுபோன்ற குற்றம் புரிந்த பலரை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம்,” என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார். விரைவில் மேலும் சிலர் கைது செய்யப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் சொன்னார்.

சோதனைச்சாவடி அதிகாரியிடம் ஒருவர் கடப்பிதழைச் சமர்ப்பிப்பதற்காக நிறுத்தாமல் செல்வது மலேசிய குடிநுழைவு சட்டத்தின்கீழ் பெரிய குற்றமாகும் என்று அவர் வலியுறுத்தினார். அக்குற்றத்தைப் புரிவோருக்கு அபராதம் அல்லது சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என்றும் அந்த அதிகாரி சுட்டினார்.

சில மாதங்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிள்களுக்கான தானியக்க சோதனை முறையை சேதப்படுத்தியதன் தொடர்பில் மோட்டார் சைக்கிளோட்டிகள் மூவர் கைது செய்யப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார். நாசவேலையை அடையாளம் காண கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என்றும் சட்டத்தை மீறுவோர் மீது தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்