தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பேரணியில் மாணவர்கள்மீது நடவடிக்கை: ஜகார்த்தா காவல்துறைக்கு எதிராகக் கண்டனம்

1 mins read
343211b8-f6fb-439c-bd93-05e5474b4b57
ஜகார்த்தாவில் கடந்த மே தினப் பேரணியில் சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. - மாதிரிப் படம்: ஏஎஃப்பி

ஜகார்த்தா: இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவில் நடந்த மே தினப் பேரணியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்மீது காவல்துறை நடவடிக்கை எடுத்தது.

கடந்த மே மாதம் நடந்த அந்நிகழ்வில் காவல்துறை, மாணவர்கள்மீது அளவுக்கதிகமாக வன்முறை கலந்த அணுகுமுறையைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்கள் குற்றவாளிகளைப் போல் நடத்தப்பட்டதாக நம்பப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து இந்தோனீசியப் பல்கலைக்கழகம் (யுஐ) உள்ளிட்ட அமைப்புகள் காவல்துறையின் நடவடிக்கைகளுக்கு எதிராகக் கண்டம் தெரிவித்துவருகின்றன. அந்தப் பேரணியின்போது காவல்துறை அதன் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாகவும் குடிமக்களின் ஜனநாயக உரிமைகளைப் பறித்ததாகவும் அந்த அமைப்புகள் சாடியுள்ளன.

யுஐ பல்கலைக்கழக மாணவரான சோ யோங் கி சந்தேக நபராக வகைப்படுத்தப்பட்டார். ஆர்ப்பாட்டத்தில் மருத்துவ உதவியாளராகப் பணிபுரிந்தபோது அவர் சந்தேக நபராக வகைப்படுத்தப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

மருத்துவப் பணியாளர் சீருடை அணிந்தபடி முதலுதவிப் பொருள்களை வைத்திருந்த தத்துவப் பட்டக் கல்வி மாணவரான சோ யோங் கி கைது செய்யப்படுவதற்கு முன்பு வன்முறைக்கு ஆளானதாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து தாங்கள் மிகுந்த கவலை கொண்டிருப்பதாக யுஐ பல்கலைக்கழகத்தின் தத்துவப் பிரிவு செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது. சட்ட நடவடிக்கையின்போது அவருக்கு முழு ஆதரவு வழங்கப்போவதாகவும் யுஐ உறுதியளித்துள்ளது.

மே ஒன்றாம் தேதி நடந்த பேரணி பொது ஒழுங்குக்குப் பங்கம் விளைவித்ததாகக் காவல்துறையினர் குற்றஞ்சாட்டுகின்றனர். அதில் கலந்துகொண்டோரில் 14 பேரை சந்தேக நபர்களாகக் காவல்துறை அடையாளம் கண்டது.

அவர்களில் நால்வர் பயிற்சி மருத்துவ, பயிற்சி சட்ட உதவியாளர்கள்.

குறிப்புச் சொற்கள்