சட்டவிரோதக் குடியேறிகள் பணியமர்த்தலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

சட்டவிரோதக் குடியேறிகள் பணியமர்த்தலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

படம்: த ஸ்டார்

03 Nov 2026 - 7:09 pm

2 mins read

கோலாலம்பூர்: மலேசியாவின் வேலைவாய்ப்புத் துறையில் சட்டவிரோதக் குடியேறிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும் அவர்கள் உரிய அனுமதியின்றி வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடுக்கவும் அந்நாட்டு அரசாங்கம் மூன்று குறிப்பிட்ட இலக்கு நோக்கிய அமலாக்க நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

‘ஒப் ஹிஜாவ்’, ‘ஒப் ஜாஜா’, ‘ஒப் பெலாஞ்சா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த தீவிர நடவடிக்கைகள், மலேசிய உள்துறை அமைச்சு, குடிநுழைவுத் துறையால் இணைந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வெளிநாட்டினர், குறிப்பாக ஆவணமற்ற சட்டவிரோதக் குடியேறிகளின் வருகையைக் கட்டுப்படுத்த அரசாங்கம் தொடர்ந்து அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மலேசிய உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

இது தொடர்பாக நாடாளுமன்ற இணையத்தளத்தில் திங்கட்கிழமை (நவம்பர் 2) இரவு வெளியிடப்பட்ட தமது எழுத்துபூர்வப் பதிலில் அவர் மேலும் விவரித்தார்.

“அரசாங்கம் மேற்கொண்டு வரும் இலக்கு நோக்கிய நடவடிக்கைகளில் ஒன்றான ‘ஒப் ஹிஜாவ்’, பயிர்த்தோட்டங்கள், கால்நடைப் பண்ணைகள் மற்றும் தாவர நாற்றுப் பண்ணைகள் உள்ளிட்ட விவசாயத் துறையைக் கண்காணிப்பதில் கவனம் செலுத்துகிறது.

“அதேபோன்று ‘ஒப் ஜாஜா’ நடவடிக்கையானது இரவுச் சந்தைகள், உழவர் சந்தைகள், மொத்த விற்பனைச் சந்தைகள், பழக்கடைகள் மற்றும் சாலையோரக் கடைகளில் நடைபெறும் சிறுவணிக நடவடிக்கைகளை இலக்காகக் கொண்டுள்ளது.

“மற்றொரு நடவடிக்கையான ‘ஒப் பெலாஞ்சா’, பேரங்காடிகள், பலசரக்குக் கடைகள், அறைகலன் விற்பனையகங்கள், அடையாளம் காணப்பட்ட பிற வர்த்தக வளாகங்களைக் குறிவைத்து நடத்தப்படுகிறது,” என்று அவர் தெரிவித்தார்.

2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதி முதல் 2026ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி வரை, இந்த மூன்று இலக்கு நோக்கிய திட்டங்களின்கீழ் குடிநுழைவுத் துறை 2,644 சோதனை நடவடிக்கைகளை நடத்தியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

அந்நடவடிக்கைகளின்போது மொத்தம் 19,192 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில் 4,168 சட்டவிரோதக் குடியேறிகளும் குடிநுழைவுச் சட்டங்களை மீறியதாகச் சந்தேகிக்கப்படும் 299 முதலாளிகளும் கைது செய்யப்பட்டனர் என்று அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
மலேசியாகுடியேறிசட்டவிரோதம்நடவடிக்கை