கோலாலம்பூர்: சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் வேலை செய்யும் மலேசியர்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மலேசிய அரசாங்கம் விரிவுபடுத்தவுள்ளது.
சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே அன்றாடம் பயணம் செய்யும் மலேசியர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் அந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகள் இருக்கும்.
அதற்கு ஏற்ப சுயதொழில் சமூகப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் அறிவித்துள்ளார்.
இந்நடவடிக்கை வெளிநாட்டில் வேலை செய்யும் மலேசியர்களை தேசியப் பாதுகாப்புக் கட்டமைப்பில் சேர்க்கப்படுவதை உறுதிசெய்யும் என்றார் அவர்.
முதலாவதாக இம்முயற்சி எல்லை கடந்து சிங்கப்பூர் செல்லும் மலேசியர்களை இலக்காகக் கொண்டிருக்கும். பின்னர் வெளிநாட்டில் வேலை செய்யும் இதர மலேசியர்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அவர் கூறினார்.
“எல்லை தாண்டி பணியாற்றும் மலேசியர்களில் சராசரியாக வாரம் ஒருவர் உயிரிழக்கிறார் அல்லது ஆண்டிற்கு 64 பேர் இறக்கின்றனர்,” என்று தேசிய தினக் கொண்டாட்டத்தின்போது (மே 1) அன்வார் தெரிவித்தார்.
“சுயதொழில் சமூகப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வதோடு தற்போதுள்ள சட்டக் கட்டமைப்பை அரசாங்கம் வலுப்படுத்தும். இதன்மூலம் மலேசியா - சிங்கப்பூர் எல்லை தாண்டிய ஊழியர்கள் உட்பட வெளிநாடுகளில் பணியாற்றும் மலேசியர்களுக்கான பாதுகாப்பு விரிவுபடுத்தப்படும்,” என்று பிரதமர் அன்வார் குறிப்பிட்டார்.
இந்த சட்டத்திருத்ததால் ஏறக்குறைய 480,000 ஊழியர்கள் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
முன்னதாக, மனிதவள அமைச்சரான ஆர். ரமணன், சிங்கப்பூருக்கு வேலை செய்வதற்காகச் செல்லும் 400,000க்கும் மேற்பட்ட ஊழியர்களைப் பாதுகாக்க தனது அமைச்சு சமூகப் பாதுகாப்பு உத்தேசத் திட்டத்தை முன்மொழியும் என்று கடந்த மார்ச் மாதம் கூறியிருந்தார்.

