கோலாலம்பூர்: 1மலேசியா டெவலப்மென்ட் பெர்ஹாட் (1எம்டிபி) ஊழலால் ஏற்பட்ட பல பில்லியன் ரிங்கிட் இழப்பு, அரசாங்கம் இன்னும் எவ்வளவு நிதியை மீட்டெடுத்தாலும் முழுமையாகத் தீராது என்று அந்நாட்டின் நிதி இரண்டாம் அமைச்சர் அமீர் ஹம்ஸா அஸிஸான் தெரிவித்துள்ளார்.
மேலும் பல சொத்துகள் மீட்கப்பட்டாலும், நாடு சந்தித்த நிதி இழப்புகளை அவை முழுமையாக ஈடுசெய்துவிட முடியாது என்றார் அவர்.
அந்த ஊழல் வெளிச்சத்துக்கு வந்ததைத் தொடர்ந்து, முதலீட்டாளர்களின் நம்பிக்கைக்கு ஏற்பட்ட பாதிப்பும் தொடர்ந்து கவலைக்குரிய விஷயமாகவே நீடிக்கிறது என்று அவர் கூறினார்.
மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் புதன்கிழமை (அக்டோபர் 28) பேசிய அவர், “இதற்குக் காரணமானவர்களிடமிருந்து இழப்பீடு கோருவதில் அரசாங்கம் வலுவான வாதங்களை முன்வைத்துள்ளதால், கூடுதலான நிதியை மீட்பதற்கான நல்ல வாய்ப்புகள் உள்ளன.
“இருப்பினும், அந்த மீட்பு நடவடிக்கைகள் 1எம்டிபி ஊழலால் ஏற்பட்ட இழப்புகளை முற்றிலும் போக்கிவிடவோ நாடு சந்தித்த பல்லாயிரம் கோடி ரிங்கிட் இழப்பைக் கணிசமாகக் குறைத்துவிடவோ முடியாது,” என்று அவர் குறிப்பிட்டார்.
1எம்டிபியின் கடன்களை அடைக்கவும் நிதிக் கடப்பாடுகளை நிறைவேற்றவும் பொது நிதியிலிருந்து பல பில்லியன் ரிங்கிட் பயன்படுத்தப்பட்டதால், நாட்டின் வளர்ச்சி சார்ந்த முன்னுரிமைத் திட்டங்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளன என்று அமீர் ஹம்ஸா தெரிவித்தார்.
கடந்த 2017ஆம் ஆண்டிலிருந்து அடுத்தடுத்த வரவுசெலவுத் திட்டங்களின் கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்ட செயல்பாட்டு, வளர்ச்சித் திட்டங்களுக்கான ஒதுக்கீடுகளிலிருந்து, 1எம்டிபியின் நிதிப் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காக அரசாங்கம் 18.7 பில்லியன் ரிங்கிட்டை (S$5.85 பில்லியன்) செலவிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
குறிப்பாக, 2023ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மட்டும், அரசாங்க உத்தரவாதம் அளிக்கப்பட்ட 3 பில்லியன் அமெரிக்க டாலர் (S$3.85 பில்லியன்) மதிப்புடைய 1எம்டிபி கடன் பத்திரங்களை மீட்பதற்காக, அரசாங்கம் தனது மேம்பாட்டுச் செலவினத்திலிருந்து 13 பில்லியன் ரிங்கிட்டை ஒதுக்க வேண்டியிருந்ததாக அவர் கூறினார்.
