‌‌மலேசியச் சுற்றுப்புறத் துறை துணைத் தலைமை இயக்குநர்மீது கூடுதல் கையூட்டுக் குற்றச்சாட்டு

‌‌மலேசியச் சுற்றுப்புறத் துறை துணைத் தலைமை இயக்குநர்மீது கூடுதல் கையூட்டுக் குற்றச்சாட்டு

1 mins read
001de564-9178-47ba-928d-7d17a9aa25f9
மலேசியச் சுற்றுப்புறத் துறைத் துணைத் தலைமை இயக்குநர் டாக்டர் நோர்ஹஸ்னி மாட் சாரி, கையூட்டு பெற்றதாக மேலும் ஒரு குற்றச்சாட்டை எதிர்கொள்கிறார். - படம்: மலாய்மெயில்

‌‌ஷா அலாம்: மலேசியச் சுற்றுப்புறத் துறைத் துணைத் தலைமை இயக்குநர் டாக்டர் நோர்ஹஸ்னி மாட் சாரிமீது கையூட்டு பெற்றதாக ‌‌‌ஷா அலாம் நீதிமன்றத்தில் புதிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டு மே 25ஆம் தேதி கிள்ளானில் உள்ள தாமான் செந்தோசாவில் நடைபெற்ற வீட்டுப் பழுதுபார்ப்புக்காக டாக்டர் நோர்ஹஸ்னி 9,110 ரிங்கிட் கையூட்டுப் பெற்றதாகக் கூறப்படுகிறது. தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை டாக்டர் நோர்ஹஸ்னி நிராகரித்தார்.

இதற்குமுன், கழிவு நிர்வாக நிறுவனத்திடமிருந்து 21,000 ரிங்கிட் மதிப்புள்ள கையூட்டை இணையம்வழி ஆறு முறை டாக்டர் நோர்ஹஸ்னி வாங்கியதாகக் கோலாலம்பூர் நீதிமன்றத்தில் குற்றஞ்சுமத்தப்பட்டது.

தமது அதிகாரத்துவக் கடமைகளுடன் சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்தின் வங்கிக் கணக்குக்கு அந்தத் தொகை மாற்றிவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. டாக்டர் நோர்ஹஸ்னி அந்த ஆறு குற்றச்சாட்டுகளையும் நீதிமன்றத்தில் மறுத்தார்.

வழக்குத் தொடர்பில் கோலாலம்பூர் நீதிமன்றம் ஏப்ரல் 3ஆம் தேதி 25,000 ரிங்கிட் பிணையில் டாக்டர் நோர்ஹஸ்னி விடுதலையாகலாம் என்ற தெரிவித்தது.

டாக்டர் நோர்ஹஸ்னி தற்போது எதிர்நோக்கும் குற்றச்சாட்டைப் பிற குற்றச்சாட்டுகளுடன் சேர்த்து விசாரிக்கும்படியும் கோலாலம்பூர் நீதிமன்றம் வழங்கிய பிணையை அனுமதிக்கும்படியும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறினார்.

‌‌‌‌‌‌ஷா அலாம் நீதிமன்றம் அந்தக் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டது.

கோலாலம்பூரில் டாக்டர் நோர்ஹஸ்னி வழக்கு மீண்டும் மே 19ஆம் தேதி விசாரிக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்