கோலாலம்பூர்: தீபாவளிக்காக மலேசிய அரசாங்கம் பதிவு செய்யப்படாத ஒருநாள் விடுமுறையை (CTR) அறிவித்துள்ளது.
அதன்படி, அரசாங்கத் துறைகளில் பணிபுரியும் இந்திய அல்லது இந்து ஊழியர்கள் தீபாவளிக்கு மறுநாளோ முதல்நாளோ ஒருநாள் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம்.
இந்த ஆண்டு தீபாவளி அக்டோபர் 31அன்று கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் மலேசியாவில் பொது விடுமுறை.
அரசாங்க ஊழியர்களில் இந்துக்களாக உள்ளோருக்கு இவ்வாண்டு முதல் பதிவு செய்யப்படாத விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதனை பொதுச் சேவைத் துறை தனது அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது.
இது தொடர்பாக எல்லா மாநிலங்களின் பொது ஊழியர்களுக்கும் அரசாங்க அமைப்புகள் மற்றும் உள்ளூர் நிர்வாக அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதாகவும் பொதுச் சேவைத் துறை குறிப்பிட்டு உள்ளது.
அரசாங்க அதிகாரிகளின் அனுமதியோடு கூடுதல் விடுப்பை எடுத்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
“தீபாவளித் திருநாளில் அரசாங்கம் தனது வாழ்த்துகளைத் தெரிவிக்கிறது. இந்தக் கூடுதல் விடுப்பு, பண்டிகையைச் சிறந்த முறையில் அரசு ஊழியர்கள் வரவேற்று, கொண்டாட உதவும் என்று அரசாங்கம் கருதுகிறது,” என்று அதன் அறிக்கை கூறுவதாக பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

