பாரிஸ்: காடுகளுக்கும் வயல்களுக்கும் மேலே பறக்கும் ஆளில்லா வானூர்திகளைத் தடுப்பதற்காக வடிவமைக்கப்பட்ட சாதனங்களை பிரான்சின் பாரிஸ் நகருக்குத் தெற்கே உள்ள ஒரு முன்னாள் விமானச் சோதனைத் தளத்தில் சில குழுக்கள் சோதித்து வருகின்றன.
கடந்த 2022ஆம் ஆண்டில் ரஷ்யா உக்ரேன் மீது படையெடுத்ததில் இருந்து அதிகரித்து வரும் வானூர்தி ஊடுருவல்கள் மற்றும் இருவிதமான தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அந்தச் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
‘பிரெட்டினி-சுர்-ஓர்ஜ்’ தளத்தில் சோதிக்கப்படும் மின்னணுச் செயலிழப்பு, இடைமறிக்கும் வானூர்திகள் போன்ற தொழில்நுட்பத்திற்குரிய வாடிக்கையாளர்கள், இனி வெறும் அரசாங்கங்கள், காவல்துறையினர் மற்றும் ராணுவத்தினர் மட்டுமல்ல.
முக்கியக் கட்டமைப்புகளை இயக்கும் ஐரோப்பா முழுவதிலும் உள்ள தனியார் நிறுவனங்களும் அரசு அமைப்புகளும் தங்களுடைய தற்காப்பை வலுப்படுத்த விரும்புகின்றன.
இதில் சில சேவை நிறுவனங்கள், வானூர்திகளைத் தாங்களே சுட்டு வீழ்த்துவதற்கான அனுமதியைக் கோரியுள்ளன.
பாரிஸ் முதல் பெர்லின் வரையிலான அரசாங்கங்கள் இதை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.
உக்ரேனில் ரஷ்யத் தாக்குதல்களுக்குப் பிறகு அடிக்கடி நிகழ்ந்ததுபோல, வானூர்திகள் மூலம் மேற்கொள்ளப்படும் தாக்குதலினால் ஏராளமான மக்களுக்கு மின் விநியோகம் துண்டிக்கப்படலாம் என்று அந்த அரசாங்கங்கள் கவலை தெரிவித்துள்ளன.
பிரெஞ்சு நாடாளுமன்றம் ஆகஸ்ட் மாதம் ஒரு சட்டத்தை நிறைவேற்றியது. குறிப்பிட்ட வசதிகளுக்கு அருகில் பறக்கும் வானூர்திகளைக் கண்டறியவும் அவற்றின் செயல்பாடுகளைத் தடுக்கவும் சுட்டு வீழ்த்தவும் அந்தச் சட்டம் அனுமதிக்கிறது.
