பெய்ஜிங்: பொதுவாக குழந்தைகளை அமைதியாக இருக்கச்செய்ய வாயில் மென்னக்கூடிய பேசிஃபையர் (pacifier) பயன்படுத்தப்படுவதுண்டு.
இப்போது பெரியவர்களுக்கும் இதுபோன்ற பேசிஃபையர்கள் இருக்கின்றன. குழந்தைகளை அமைதியாக வைத்திருக்க மட்டும் பயன்படுத்தப்படும் பேசிஃபையர், பெரியவர்களைப் பொறுத்தவரை பல விதங்களில் உதவுகிறது.
மனைவுளைச்சலைப் போக்குவது, நன்று உறங்கச் செய்வது, புகைபிடிக்கும் பழக்கத்தைக் கைவிடுவது போன்ற வழிகளில் பெரியவர்களுக்கான பேசிஃபையர்கள் உதவுவதாக சில்லறை வர்த்தகர்கள் உள்ளிட்டோர் கூறுகின்றனர்.
சீனா, தென்கொரியா, அமெரிக்கா போன்ற பகுதிகளில் இவை பிரபலமாகியுள்ளன. பெரியவர்கள் பேசிஃபையர்களை அதிக காலம் பயன்படுத்தினால் அவர்கள், பற்கள் நகர்வது, வாய்க்குக்கீழ் உள்ள பகுதி விறைப்பாவது போன்ற பிரச்சினைகளை எதிர்நோக்கக்கூடும் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். மேலும், உறங்கும்போது பேசிஃபையர்களைப் பயன்படுத்தினால் மூச்சடைப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம் என்றும் மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.
சவுத் சைனா மோர்னிங் போஸ்ட் ஊடகம் இம்மாதம் மூன்றாம் தேதி வெளியிட்ட செய்தியின்படி சில்லறை வர்த்தகர்கள் ஒரு மாதத்துக்கு 2,000க்கும் அதிகமான பெரியவர்களுக்கான பேசிஃபையர்களை விற்கின்றனர். ஒவ்வொரு பேசிஃபையரும் டாவ்பாவ் (Taobao) போன்ற மின்வர்த்தகத் தளங்களில் 10லிருந்து 500 யுவனுக்கு (1.80 - 89.42 வெள்ளி) விற்கப்படுகிறது.
சிங்கப்பூரில் இயங்கும் மின்வர்த்தகத் தளங்களில் பெரியவர்களுக்கான பேசிஃபையர்கள் விற்கப்படவில்லை என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது. மதர்கேர் எஸ்ஜி (Mothercare SG), ஃபேர்பிரைஸ் போன்ற தளங்களில் விற்கப்படும் குழந்தைகளுக்கான பேசிஃபையர் ஒவ்வொன்றின் விலையும் பொதுவாக 10 வெள்ளிக்கும் மேல் இருக்கிறது.
இணையத்தில் பெரியவர்களுக்கான பேசிஃபயர்களைப் பற்றிய கருத்துகள் பொதுவாக நல்லவையாகவே இருக்கின்றன. எனினும், வல்லுநுர்கள் எச்சரிக்கவும் செய்கின்றனர்.
சீனாவின் செங்டு நகரில் பல் மருத்துவராகப் பணியாற்றும் டேங் காவ்மின், பெரியவர்கள் பேசிஃபையர்களை அதிகமாகப் பயன்படுத்தினால் வாய்க்குக்கீழ் உள்ள பகுதி விறைப்பாக ஆகலாம், மெல்லும்போது வலி ஏற்படலாம் என்று எச்சரித்துள்ளார். தினமும் மூன்று மணிநேரத்துக்கு மேல் பேசிஃபையர்களைப் பயன்படுத்தினால் பற்கள் நகரலாம் என்றும் அவர் கூறினார் என சவுத் சைனா மோர்னிங் போஸ்ட் தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
உறங்கும்போது உபயோகித்தால் பேசிஃபையரின் சில பகுதிகள் கழண்டுபோகலாம், மூச்சை இழுக்கும்போது அப்பகுதிகளை விழுங்க நேரிடலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேபோல், செங்டுவில் மனநல நிபுணராகப் பணியாற்றும் சாங் மோ, இதுபோன்ற பொருள்கள் பிரபலமாக இருப்பது மக்களிடையே இருக்கக்கூடிய ஆழ்ந்த உணர்வுரீதியான குறைகளைக் குறிக்கலாம் என்று சொன்னார். குழந்தைப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவது தீர்வல்ல, ஒருவர் பிரச்சினைகளை நேரடியாகச் சந்திக்கவேண்டும் என்று அவர் அறிவுரை வழங்குகிறார்.

