ஹாங்காங்: சீனாவின் தேசிய அரசியல் ஆலோசகர் ஒருவர், சட்டபூர்வ திருமண வயதை 18ஆகக் குறைக்கும்படி ஆலோசனை கூறியுள்ளார்.
மக்கள்தொகை குறைந்துவரும் நிலையில், கருத்தரிக்கும் வாய்ப்புகளை அதிகரிப்பது இதன் நோக்கம்.
சீனாவில் குழந்தைப் பிறப்பு தொடர்பான கட்டுப்பாடுகளை முற்றிலும் தளர்த்துவதற்கான பரிந்துரையைச் சமர்ப்பிக்கவிருப்பதாக தேசிய அரசியல் ஆலோசனைக் குழுவான ‘சிபிபிசிசி’யின் உறுப்பினர் சென் சாங்ஸி, ‘குளோபல் டைம்ஸ்’ நாளேட்டிடம் தெரிவித்தார்.
திருமணம், குழந்தைப் பிறப்பு ஆகியவற்றுக்கான ஊக்குவிப்புத் திட்டத்தை உருவாக்கவும் அந்தப் பரிந்துரை வழிவகுக்கும்.
சீனாவில் அடுத்த வாரம் நடைபெறும் வருடாந்தர நாடாளுமன்றக் கூட்டத்துக்கு முன்பாக அவரது கருத்துகள் வெளிவந்துள்ளன. அந்தக் கூட்டத்தில், சரியும் மக்கள்தொகைப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் நடவடிக்கைகளை அதிகாரிகள் அறிவிப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவில் தற்போது சட்டபூர்வ திருமண வயது ஆண்களுக்கு 22. பெண்களுக்கு அது 20ஆக உள்ளது.
ஒப்புநோக்க, பெரும்பாலான வளர்ந்த நாடுகளில் சட்டபூர்வ திருமண வயது 18ஆக உள்ளது. எனவே அனைத்துலக விதிமுறைகளுக்கு ஏற்ப சீனாவிலும் அந்த வயது வரம்பு அமைந்திருக்க வேண்டும் என்கிறார் திரு சென்.