பெய்ஜிங்: ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பூசல்களை, பலத்தைப் பயன்படுத்தாமல், பேச்சுவார்த்தை, கலந்தாலோசனை மூலம் தீர்க்க வேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாக்கியிடம் தொலைபேசி அழைப்பின்போது கூறியிருக்கிறார்.
சீன வெளியுறவு அமைச்சு வெள்ளிக்கிழமை (மார்ச் 13) வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அதனைத் தெரிவித்தது.
இரு தரப்பும் அமைதி காக்குமாறும் கட்டுப்பாட்டுடன் இருக்குமாறும் திரு வாங் வலியுறுத்தினார்.
அதோடு, கூடிய விரைவில் நேரடிப் பேச்சுவார்த்தைகளை நடத்தி, உடனடிச் சண்டைநிறுத்தத்தை எட்டி, கருத்து வேறுபாடுகளைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து பலத்தைப் பயன்படுத்துவதால், நிலைமை இன்னும் சிக்கலாகும்; பதற்றநிலை அதிகரிக்கும் என்று திரு வாங் கூறினார்.
இருதரப்புக்கும் இடையே சமரசம் செய்ய, சீனா முயற்சிகள் மேற்கொண்டுள்ளபோதும், மார்ச் 13ஆம் தேதி, ஆப்கானிஸ்தானின் கந்தஹார் விமான நிலையத்திற்கு அருகே உள்ள ‘காம் ஏர்' தனியார் விமான நிறுவனத்தின் எரிபொருள் கிடங்குமீது பாகிஸ்தான் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது.
பல்லாண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையே நேர்ந்துள்ள மிக மோசமான சண்டையை அது தீவிரப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
திரு வாங்கும் திரு முத்தாக்கியும் ஈரானின் தற்போதைய நிலைமை குறித்துக் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டதாகவும் அந்த அறிக்கை தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
ஈரானில் அமைதியைக் கொண்டுவருவதற்காக ஆப்கானிஸ்தான் உட்பட அனைத்துலகச் சமூகத்துடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக இருப்பதாகத் திரு வாங், திரு. முத்தாக்கியிடம் தெரிவித்ததாக அந்த அறிக்கை குறிப்பிட்டது.

