வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், காஸாவில் போர் முடிந்ததும் இஸ்ரேல் அதை அமெரிக்காவிடம் ஒப்படைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், காஸா மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக வேறு இடங்களுக்கு குடியேறி வருவதால் அமெரிக்கப் படைகள் காஸாவிற்குள் தேவையில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
சில நாள்களுக்கு முன்னர் அதிபர் டிரம்ப் காஸாவை அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அதை உருமாற்றம் செய்யப்போவதாக அறிவித்தார்.
மேலும் இஸ்ரேல் ராணுவம், காஸா மக்கள் வேறு நாடுகளுக்கு குடியேற அனுமதிக்கும் என்று கூறியது. அது பெரும் கண்டனத்திற்கு உள்ளானது.
அதைத் தொடர்ந்து தற்போது அதிபர் டிரம்ப் தமது சமூக ஊடகத்தில் காஸா குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
“காஸாவில் சண்டை முடிந்தவுடன் இஸ்ரேல் காஸாவை அமெரிக்காவிடம் ஒப்படைக்கும். பாலஸ்தீன மக்கள் மத்திய கிழக்கு வட்டாரத்தில் உள்ள நாடுகளில் இடம்பெயரத் தொடங்கியுள்ளனர்.
“பாலஸ்தீனர்களுக்கு பிடித்த இடங்களிலும் அவர்களை அரவணைக்கும் இடங்களிலும் அவர்கள் உள்ளனர். அமெரிக்க ராணுவ வீரர்கள் அங்கு தேவையில்லை,” என்று திரு டிரம்ப் தெரிவித்தார்.
இந்நிலையில், இஸ்ரேலிய தற்காப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் அதிபர் டிரம்பின் அறிக்கையை வரவேற்றுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
காஸாவைவிட்டு தானாக வெளியேற நினைக்கும் காஸா மக்களுக்கு இஸ்ரேல் ராணுவம் உதவும் என்றும் அவர்களுக்கு நிலம், கடல், விமான வழி பயணங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் காட்ஸ் தெரிவித்தார்.
டிரம்பின் அறிக்கைக்கு ஹமாஸ் படையினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது திட்டமிடப்பட்ட ஆக்கிரமிப்பு என்று அவர்கள் சாடியுள்ளனர். இவற்றை தடுக்க அரபு நாடுகள் உச்சநிலை மாநாட்டுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் குரல் கொடுத்துள்ளனர்.