பிரான்ஸ்: ‘சைன்ஸ்’ இதழில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வின்படி, சிக்கலான மருத்துவ வழக்குகளுக்குத் தீர்வு காண்பதில், பொது மருத்துவர்களைக் காட்டிலும், மருத்துவர்களைப் போலவே நோயாளிகளைப் படிப்படியாகப் பரிசோதிக்கும் ஒரு செயற்கை நுண்ணறிவு கருவி இரண்டு மடங்குக்கும் அதிகமான துல்லியத்தைக் கொண்டிருந்ததாக மைக்ரோசாப்ட் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்த அறிக்கை குறிப்பிடுவதன்படி, நோய்களைக் கண்டறிய ஒன்றாகச் செயல்படும் உருவகப்படுத்தப்பட்ட மருத்துவ நிபுணர்களின் குழுவைப் பயன்படுத்தி, ஒரு பிரச்சினைக்கு செயற்கை நுண்ணறிவு எவ்வாறு தீர்வுகாணும் என்பதை ஒழுங்கமைக்கும் ஓர் “ஆர்கெஸ்ட்ரேட்டர்” கட்டமைப்பு மூலமாக, அந்தக் கட்டமைப்பு நோயாளியிடம் கேட்கப்பட வேண்டிய கேள்விகள், செய்யப்பட வேண்டிய சோதனைகள், ஆய்வுகளை அடையாளம் கண்டு ஒருங்கிணைக்கிறது.
தற்போதுள்ள மருத்துவ செயற்கை நுண்ணறிவு மாதிரிகள், வழக்கமாக ஒரு நோயாளியின் அனைத்து அறிகுறிகள், ஆய்வக முடிவுகள், ‘ஸ்கேன்’ அறிக்கைகள் என அனைத்தையும் ஒரே நேரத்தில் பகுப்பாய்வு செய்து நோயைக் கண்டறியும் முறையைப் பின்பற்றுகின்றன.
ஆனால், நோயறிதலை எட்டுவதற்கான படிகளை ‘ஆர்கெஸ்ட்ரேட்டர்’ ஒருங்கிணைக்கும் போது, அந்தச் செயற்கை நுண்ணறிவு மாதிரி முதலில் நோயாளியின் மருத்துவ வரலாறு குறித்து என்ன கேட்க வேண்டும், உடற்பரிசோதனையில் எது முக்கியமானது என்பதைத் தீர்மானிக்கிறது.
அதிலிருந்து அது அறியும் தகவல்களின் அடிப்படையில், எந்தெந்தச் சோதனைகளைச் செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானித்து அவற்றின் முடிவுகளைப் பரிசீலித்து, தேவைக்கேற்ப கூடுதல் சோதனைகளுக்கும் பரிந்துரைக்கிறது.
கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட மிகவும் அரிதான, குழப்பமான மருத்துவப் பிரச்சினைகளைக் கண்டறியும் பணி வழங்கப்பட்டபோது, அந்த ‘டயக்னாஸ்டிக் ஆர்கெஸ்ட்ரேட்டர்’ முறையைப் பயன்படுத்திய செயற்கை நுண்ணறிவு மாதிரி, புத்தகங்கள், இணையத்தைப் பயன்படுத்தி நோயறிதலை மேற்கொண்ட பொது மருத்துவர்களைக் காட்டிலும் நோயாளியைப் பரிசோதித்துச் சரியான நோயைக் கண்டறிவதில் இரண்டு மடங்குக்கும் அதிகமான துல்லியத்தைக் கொண்டிருந்தது.
அவசரச் சிகிச்சைப்பிரிவு சேர்க்கைகளின் முக்கியத் தரவுத்தளத்தில் இருந்து பெறப்பட்ட மருத்துவச் சூழல்களை வழங்கியபோதும், இக்கருவி மனித மருத்துவர்களை விடச் சிறப்பாகச் செயல்பட்டது.
